பஞ்சாயத்து பேசி ஏமாற்றப்படுவதை தவிர்த்து விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு நீதிமன்றம் மூலம் இழப்பீடு பெற நடவடிக்கை: போலீசாருக்கு துணை கமிஷனர் உத்தரவு

பெரம்பூர்: சமூகத்தில் காவல்துறையின் பங்கு என்பது ஒரு சிறிய அளவுகோலால் அளவிட்டு கூற முடியாது. அந்த அளவிற்கு அவர்களின் பங்களிப்பு உள்ளது. குற்றங்களை தடுப்பது, குற்றவாளிகளை பிடித்து தண்டனை வாங்கி கொடுப்பது மட்டும் அல்லாமல் பல்வேறு சமூக பணிகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் சொந்த குடும்பத்தினரே உதவி செய்ய தயங்கிய பலருக்கு வீடு தேடி சாப்பாடு அளித்தது, மருத்துவ உதவி செய்தது, மழை வெள்ள காலத்தில் சமூக நலக்கூடங்களில் அவர்களை தங்க வைத்து சாப்பாடு கொடுத்தது மற்றும் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது என பல்வேறு செயல்களை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

 

அதுமட்டுமின்றி குறிப்பிட்ட சில வழக்குகளை விசாரிக்கும்போது, அதன் சாதக, பாதக தன்மைகளை அறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நிவாரணம் கிடைக்க வழிவகை செய்கின்றனர். அவ்வாறு, கொளத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  விபத்தினால் ஏற்படும் மரணங்களை புதிய முறையில் அணுக காவலர்களுக்கு பயிற்சி தந்து வருகிறார் அந்த காவல் மாவட்ட துணை கமிஷனர் ராஜாராம். பொதுவாக ஒரு பகுதியில் வேலை செய்யும்போது, அங்கு வேலை செய்யும் வேலை ஆட்களின் பாதுகாப்பை அந்த நிறுவன உரிமையாளர் அல்லது அதன் ஒப்பந்ததாரர் ஏற்க வேண்டும். ஒருவர் வேலை செய்கிறார் என்றால், அது பாதுகாப்பான வேலையா, அந்த வேலையை செய்யும் போது ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா அல்லது அவர்கள் பயன்படுத்தும மின்சாதன பொருட்கள் அல்லது மெஷின்கள் பாதுகாப்பானது தானா என்பதை வேலை வாங்குபவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் வேலை செய்பவர்களின் உயிர் பாதுகாப்பானதாக அமையும். ஆனால் சில நேரங்களில் வேலை வாங்குபவர்களின் கவனக்குறைவால் தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறு உயிரிழக்கும் போது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்ட குடும்பங்களை அழைத்து பேசி முடித்து, ஒரு சிறிய குறிப்பிட்ட தொகையினை கொடுத்து சரிசெய்து விடுகின்றனர்.வழக்கையும், விபத்து என பதிவிட்டு, அதன் பின்பு நீர்த்துப்போகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு உயிரிழப்பு ஏற்படும்போது அந்த குடும்பத்தில் உள்ள யாரும் என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு விதமான குழப்பத்தில் இருப்பார்கள். அப்போது, அந்த குடும்பத்தில் உள்ள வெளி ஆட்களோ அல்லது மீடியேட்டர் எனப்படும் புரோக்கர்களோ உள்ளே புகுந்து சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் அல்லது ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரிடம் பேசி, ஒரு தொகையை வாங்கி அதில் குறிப்பிட்ட தொகையினை அவர்கள் எடுத்துக்கொண்டு மீதி தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

2 நாட்கள் அனைவரும் உடன் இருப்பார். அதன் பின்பு அந்த குடும்பம் என்னவாகும் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அந்த வகையில் ஒரு சிறு தொகையை மட்டும் விபத்தில் உயிரிழக்கும் நபர்களுக்கு கொடுத்து விட்டு செல்வது எந்தவித நியாயமும் இல்லை என்பதை உணர்ந்த கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம், விபத்து சம்பந்தமான வழக்குகளை கையாளும்போது 304 ஏ சட்டப்பிரிவை பயன்படுத்தி யார் வேலை வாங்குகிறாரோ அவர் கம்பெனி உரிமையாளராக இருக்கலாம் அல்லது ஒப்பந்ததாரராக இருக்கலாம் அல்லது சூப்பர்வைசராக இருக்கலாம் அவர் யாராக இருந்தாலும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என ேபாலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்டு அவரை சிறையில் அடைப்பதோடு நின்று விடாமல் சம்பந்தப்பட்ட வழக்கை தொழிலாளர் நீதிமன்றம் விசாரிக்க பரிந்துரை செய்து அந்த நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறார். இதன் மூலம் குற்றவியல் நடவடிக்கையில் மட்டும் நின்றுவிடாமல் அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வேலையையும் காவலர்கள் செய்ய வேண்டும் என கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.

அதற்கான பல்வேறு சம்பவங்களையும் செய்து முடித்து உள்ளார். குறிப்பாக மாதவரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்யும் போது ரவிக்குமார், நெல்சன் என்ற 2 பேர் உயிரிழந்தனர். இதே போன்று, வில்லிவாக்கம் பகுதியில் டைல்ஸ் கம்பெனியில்  கடந்த ஜூலை மாதம் கீர்த்தி வாசன் ராவ் என்பவர் தீ விபத்தினால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம்  கடை ஒன்றில் எலக்ட்ரிக்கல் வேலை செய்யும்போது மாதவன் என்பவர் உயிரிழந்தார். கொளத்தூர் யுனைடெட் காலனி பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி வெல்டிங் ஷாப்பில் இளையராஜா என்பவர் உயிரிழந்தார். இந்த 4 சம்பவங்களிலும் கடையின் உரிமையாளர் ஒப்பந்ததாரர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்குகள் அனைத்தும் தொழிலாளர் நீதிமன்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு தற்போது வழக்கு அங்கு நடைபெற தொடங்கியுள்ளது.

பஞ்சாயத்து பேசி காவல் நிலையத்தோடு முடித்துவிட்டு செல்லலாம் என்று நினைத்தவர்கள், தற்போது தொழிலாளர் நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு துணை கமிஷனரின் அணுகுமுறையே காரணம் என அப்பகுதி இன்ஸ்பெக்டர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து துணை கமிஷனர் ராஜாராம் கூறுகையில், ‘‘ஒரு இடத்தில் ஒரு தொழிலாளி வேலை செய்யும் போது அந்த தொழிலாளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரப்பட வேண்டியது குறிப்பிட்ட அந்த வேலையை வாங்கும் நபர்களின் கடமை. வேலை செய்யும் இடத்தில் தொழிலாளிக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், அதற்கு வேலை வாங்கும் அந்த ஒப்பந்ததாரர் அல்லது உரிமையாளரே பொறுப்பாவார். எனவே இழப்பீடு தொகையை கண்டிப்பாக அவர்கள் கொடுக்க வேண்டும். இதற்காக தொழிலாளர் நீதிமன்றங்கள் உள்ளன.

நீதிமன்றம் சென்று வழக்கை நடத்துவதற்கு பணம் இல்லை என்றெல்லாம் நிறைய பேர் இன்றளவும் நீதிமன்றங்கள் குறித்து தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். தொழிலாளர் நீதிமன்றங்களை பொறுத்தவரையில் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு குறைந்தபட்சம் ஓராண்டுக்குள் அவர்களுக்கான தொகை வழங்கப்படுகிறது. இதனை தொழிலாளர் நீதிமன்றத்தின் இணை ஆணையர் தனி கவனத்துடன் செயல்படுத்தி வருகிறார். எனவே காவல் நிலையங்களில் பஞ்சாயத்து பேசி முடிக்கின்ற வேலைகளை தவிர்த்து, தொழிலாளர் நீதிமன்றங்களை அணுகுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நல்ல தொகை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சென்றடையும். இதன் மூலம் குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட பல விஷயத்திற்கு அந்த பணம் பயன்படுகிறது. எனவே எங்களது காவல் மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடை பெற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை அணுகி முதலில் அவர்களுக்கு தொழிலாளர் நீதிமன்றங்கள் என்றால் என்ன அதன் மூலம் எவ்வளவு பணம் கிடைக்கும்.

வழக்கு எவ்வளவு நாளில் முடியும் போன்ற தகவல்களை தெளிவாக அவர்களுக்கு புரிய வைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். எனவே, பாதிக்கப்பட்டவர்கள் அந்த நேரத்தில் வரும் சிறு தொகையை நம்பி தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என நாங்கள் அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருறோம்,’’ என்றார். வேலையின் போது எதிர்பாராத விதமாக உயிர் பலி நடந்தால் வழக்கு பதிவு செய்து குறிப்பிட்ட நபரை கைது செய்யாமல் விபத்து என வழக்கு பதிவு செய்து பஞ்சாயத்து பேசி முடித்து குறிப்பிட்ட குடும்பங்களுக்கு ஒரு தொகையினை வாங்கி கொடுத்து விட்டு தங்களுக்கும் என்ன தேவையோ அதனை வாங்கிக் கொண்டு செல்லும் போலீசார் மத்தியில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழு நிவாரணம் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சில அதிகாரிகளின் செயல் வரவேற்க்கதக்கதாகும்.

*ரூ.10 லட்சம் வரை பெறலாம்

ஒரு விபத்து ஏற்பட்டவுடன் குறிப்பிட்ட  அந்த இடத்தில் அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வந்து விடுவார்கள்.  குறிப்பிட்ட அந்த நிறுவனமிடம் பஞ்சாயத்து பேசி அப்போதைக்கு ரூ.2 லட்சமோ  அல்லது ரூ.3 லட்சமோ வாங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொடுத்துவிட்டு  சென்றுவிடுவார்கள். சில நேரங்களில் முழு தொகையும் பாதிக்கப்பட்ட  குடும்பத்திற்கு சேராமல் பாதி தொகை மட்டுமே போய் சேர்க்கின்ற சூழலையும்  பார்த்துள்ளோம். அதன் பிறகு அந்த குடும்பம் என்ன செய்யும் என்பதை  அவர்கள் யோசிப்பது கிடையாது. இதுவே தொழிலாளர் நீதிமன்றத்தின் மூலம் இந்த  வழக்கை அணுகினால், குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வரை கண்டிப்பாக இழப்பீடு பெற முடியும்.

*யோசித்து முடிவெடுக்க வேண்டும்

கழிவுநீர் சுத்தம் செய்பவர்கள், கட்டிட  தொழிலாளிகள், எலக்ட்ரீஷியன்கள் போன்றோர் குறைந்தபட்சம் நடுத்தர குடும்பத்தை  சேர்ந்தவர்களாகவோ அல்லது அதற்கு கீழ் உள்ள மக்களாகவோ இருப்பார். எனவே  பொருளாதாரத்தில் அவர்களுக்கு பணம் மிக முக்கிய அங்கமாக இருக்கும்.  அவர்களது குடும்பத்தில் ஒரு உயிர் என்பது பணம் ஈட்ட கூடிய ஒரு நபராக  இருப்பார். அவர் இல்லாமல் அந்த குடும்பம் எவ்வாறு நகர முடியும் என்பதை  அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே உயிர் விஷயத்தில் தற்காலிக  நடவடிக்கையை நாடாமல், சற்று யோசித்து தொழிலாளர் நீதிமன்றங்கள் மூலம்  அவர்களது பிரச்னையை அணுகினால் கண்டிப்பாக நல்ல பயன் இருக்கும்.

Related Stories: