×

பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே குண்டும் குழியுமான என்ஜிஓ நகர் சாலை: சீரமைக்க வலியுறுத்தல்

தாம்பரம்: பெருங்களத்தூர் பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார்கள் மூலம் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சாலை வழியாக, சுவாமி விவேகானந்தா சாலை சென்று, என்.ஜி.ஓ நகர் சாலை வழியாக, எஸ்.எஸ்.எம் நகர், திருவஞ்சேரி, பதவஞ்சேரி, அகரம் தென், சித்தாலப்பாக்கம், கோவிலஞ்சேரி, மதுரபாக்கம், வேங்கடமங்கலம், கேம்ப் ரோடு, சேலையூர், மேடவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதில் குறிப்பாக என்.ஜி.ஓ நகர் சாலை சுற்றுவட்ட பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதுடன் இதன் அருகே தனியார் பள்ளி, கல்லூரி என இயங்கி வருகிறது. இதனால், அப்பகுதி பொது மக்களுக்கும் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ - மாணவிகளுக்கும் அந்த சாலை மிகவும் முக்கியமான சாலையாக உள்ளது.

அதுமட்டுமின்றி வண்டலூர் பகுதியில் இருந்து அகரம் தென் பிரதான சாலையில் உள்ள கல்லூரிகளுக்கு செல்வதற்கு மாணவர்கள் என்.ஜி.ஓ நகர் சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு எப்போதும் பரபரப்பாக காணப்படும் இச்சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டு அது சரிவர பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அந்த சாலையில் உள்ள தனியார் குடியிருப்பு சார்பில் சாலையை ஆக்கிரமித்து மரம், செடிகள் வளர்த்து வைத்திருப்பதாலும், சாலையில் கால்வாய் வசதி இல்லாததால் சம்பந்தப்பட்ட குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முறையாக செல்ல வழி இல்லாமல் சாலை முழுவதும் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறு குண்டும், குழியுமாக உள்ள அந்த சாலையில் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரிப்பதுடன் பொதுமக்களுக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்படுகிறது. அதோடுமட்டுமல்லாமல் பெரும்பாலான நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் அந்த சாலையில்  பள்ளம் எது,  என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே அச்சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘‘என்.ஜி.ஓ நகர் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.  இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தால் அவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்க முன்வருவதில்லை. இதனை கண்டித்து சமீபத்தில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். அப்போது, சாலையில் உள்ள பள்ளமான இடத்தில் மண் கொட்டி விட்டு சென்றனர். தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் அந்த இடத்தில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருக்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் வருவோர் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும்.’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

*மழைக்காலங் களில் சாலையில் உள்ள பள்ளங்களில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரிப்பதுடன் பொதுமக்களுக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்படுகிறது.


Tags : NGO Nagar Road ,Bus Station ,Purangalatur , Potholed NGO Nagar Road near Perungalathur Bus Stand: Urged to repair
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்