×

முதல் நிலை வீராங்கனை அலிசன் அதிர்ச்சி தோல்வி

சென்னை: சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவில், முதல் நிலை வீராங்கனை அலிசன் ரிஸ்க் அமிர்தராஜ் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். முதல் சுற்றில் ரஷ்யாவின் அனஸ்டேசியா காசனோவாவுடன் (23 வயது, 147வது ரேங்க்) நேற்று மோதிய அமெரிக்க நட்சத்திரம் அலிசன் ரிஸ்க் (32 வயது, 23வது ரேங்க்) 2-6, 3-6 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவினார். இப்போட்டி 1 மணி, 29 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றியின் மூலம் காசனோவா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அவர் அடுத்து இங்கிலாந்தின் கேத்தி ஸ்வான் (23 வயது, 174வது ரேங்க்) சவாலை சந்திக்க உள்ளார். பவுச்சார்டு ஜோடி முன்னேற்றம்: சென்னை ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் நேற்று களமிறங்கிய யூஜெனி பவுச்சார்டு (கனடா) - யானினா விக்மேயர் (பெல்ஜியம்) ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் சீனாவின் ஜின்யுன் ஹான் - கதார்ஜினா காவா (போலந்து) ஜோடி யை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

*சரத் கமலுக்கு பாராட்டு
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை கண்டு ரசிப்பதற்காக பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் நேற்று அரங்குக்கு வந்திருந்தார். அதனை தெரிந்து கொண்ட தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ்,  அவரை களத்திற்கு அழைத்து பாராட்டி நினைவு பரிசு  வழங்கினார். அப்போது பேசிய சரத் கமல், “90களில் இதே அரங்கில் உயரத்தில் இருக்கும் கேலரிகளில் உட்கார்ந்து டென்னிஸ் போட்டிகளை ரசித்திருக்கிறேன். இப்போது அரங்கின் நடுப்பகுதியில் நின்று கொண்டிருக்கிறேன். அதுவும் விஜய் அமிர்தராஜ் போன்ற உச்ச நட்சத்திரத்திடம் இருந்து பரிசும், பாராட்டும் பெறுவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. அடுத்து இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா விளையாட உள்ளார். அவரை அரங்கில் உட்கார்ந்து உற்சாகப்படுத்துவேன்” என்றார். அப்பொழுது முன்னாள் டென்னிஸ் நட்சத்திரமும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான பிரகாஷ் அமிர்தராஜ் உடன் இருந்தார்.

* அங்கிதா ஏமாற்றம்: சென்னை ஓபனில் சிறப்பு அனுமதியுடன் (வைல்டு கார்டு) நேற்று களமிறங்கிய இந்திய நட்சத்திரம் அங்கிதா ரெய்னா (29 வயது, 133வது ரேங்க்) 0-6, 1-6 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் டட்யானா மரியாவிடம் எதிர்ப்பின்றி சரணடைந்தார். இந்த போட்டி 1 மணி, 16 நிமிடத்துக்கு நீடித்தது. டட்யானா 2 குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. நடியா பொடரோஸ்கா (அர்ஜென்டினா), ஓக்சனா செலக்மதேவா (ரஷ்யா), கரோல் ஸாவோ (கனடா) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.

Tags : Alison , Top seed Alison suffered a shock defeat
× RELATED சின்சினாட்டி ஒபன் டென்னிஸ்: 2வது சுற்றில் அலிசன்; லெய்லா வெளியேற்றம்