×

20,000 ச.மீ. பரப்பளவுக்கு மேல் கட்டப்படும் அடுக்குமாடிகள், தொழில்நுட்ப பூங்கா, வணிக வளாகங்கள் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் முன்அனுமதி வேண்டும்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு

சென்னை: ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம்  அமைச்சகம் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி,  20,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களின் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும் என தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2006ல் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி தமிழகத்தில் 20,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்பு, கட்டுமான பணிகள் துவங்கும் முன்பு  தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்திடம் இசைவாணை வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிடுகிறது.

* 20,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981ன் கீழ் வாரியத்திடம் இயக்குவதற்கான இசைவாணை பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே வாரிய இசைவாணை பெற்று இருப்பின் அது புதுப்பிக்கப்பட்டு செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். 20,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு கீழ் உள்ள கட்டிடங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருப்பின், அவர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இசைவாணை பெறவேண்டும்.  இக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வாரியத்தால் கண்காணிக்கப்படும்.
* அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கங்கள் வாரியத்திடம் விண்ணப்பித்து இசைவாணை பெற வேண்டும்.
* கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சரிவர பராமரிக்கப்பட்டு தொடர்ந்து திறம்பட இயக்கப்பட வேண்டும். கழிவுநீர் வாரியம் நிர்ணயித்த தர அளவிற்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யவும், மரங்கள் வளர்ப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.
* சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்கும் வண்ணம் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நீர் தர கண்காணிப்பு மையத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
* திடக்கழிவுகள் சரிவர சேகரித்து திடக்கழிவு மேலாண்மை விதிகள் - 2016ன்படி மேலாண்மை செய்யப்பட வேண்டும்.
* தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த அறிவுப்புகள் அடுக்குமாடி குடியிப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள், வணிக வளாகங்கள்ல் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முன்னறிவிப்பு இன்றி திடீர் ஆய்வு  மேற்கொள்ளும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரிவர பராமரித்து இயக்காமல் இருப்பது, திடக்கழிவு சரிவர மேலாண்மை செய்யப்படாமல் இருப்பது, செல்லத்தக்க வாரிய இசைவாணை இல்லாமல் இருப்பது கண்டறியப்படின், நீர் (மாசு தடுப்பு மற்றம் கட்டுப்பாடு) சட்டம் 1974, காற்று (மாசு தடுப்பு மற்றம் கட்டுப்பாடு) சட்டம் 1981  மற்றும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-ன்படி அந்த வளாகங்களை மூடுவதற்கும், மின் இணைப்பினை துண்டிப்பதற்கும் மற்றும் சீல் வைப்பதற்கும் வாரியம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அந்த வளாக உரிமையாளர்கள் மீது சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை விதிக்கப்படுவதுடன், மேற்படி சட்டங்களின் பிரிவுகளின்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். சுத்திகரிக்கப்படாத கழிவுநீரினை டேங்கர் லாரிகள் மூலம் எடுத்துச் சென்று சாலையோரங்கள், கால்வாய்கள், நீர் நிலைகளில் வெளியேற்றப்படுவது கண்டறியப்படின், வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் மேற்கூறிய அறிவிப்புகளை கருத்தில் கொண்டு செயல்பட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.


Tags : Tamil Nadu Pollution Control Board , 20,000 sq.m. Construction of flats, technology parks, commercial complexes over area to require prior environmental clearance: Tamil Nadu Pollution Control Board orders
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...