×

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு கேமரா பதிவு உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு, விசாரணை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறி, விசாரணையை துரிதப்படுத்தும்படி சிபிசிஐடிக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு  நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 7ம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நிலை குறித்து செப்டம்பர் 19ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க அறிவுறுத்திய நீதிபதி, விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, சி.வி.சண்முகத்தின் மனுக்களை 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Office of the High Court ,CPCID , Evidence collection including camera footage of AIADMK office looting case: CBCID information in High Court
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...