யாருக்கு சொந்தம் போட்டியில் ஆட்டோ டிரைவர் கொலை இளம்பெண் தற்கொலை முயற்சி: விழுப்புரத்தில் பரபரப்பு

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி காந்தி நகரை சேர்ந்தவர் சக்திவேல்(32), ஆட்டோ டிரைவர். இவருக்கும் பண்ருட்டி களத்துமேடு பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் சுமன் (25) என்பவருக்கும் இளம்பெண்ணுடன் பழகுவது தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், தட்டாஞ்சாவடி காளியம்மன் கோயில் செடல் திருவிழா நடந்தது. இதில் கலந்துகொண்ட சக்திவேலும், சுமனும் இரவில் அப்பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுமனும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து சக்திவேலை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சுமன், அவரது கூட்டாளி பட்டிஸ்டா குணா, வசந்தகுமார், குணா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் முதல் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் சமூக வலைதளம் மூலம் சுமன், சக்திவேல் பழகி வந்ததும், பின்னர் இருவரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டதும், இதில் அப்பெண் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னையில் சுமன், சக்திவேலுவை கொலை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில், கொலை நடந்த தினத்தில் வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாக இருந்த இளம்பெண், நேற்று விழுப்புரம் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் எலி மருந்து குடித்திருப்பதை கண்டறிந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: