மணலி மண்டலம் அரியலூரில் தனியார் வசம் உள்ள அரசு நிலத்தை மீட்டு ஏழைகளுக்கு வழங்கவேண்டும்: உதவி ஆணையரிடம் மனு

திருவொற்றியூர்: சென்னை மணலி மண்டலம் 17வது வார்டுக்கு உட்பட்ட அரியலூரில் 150க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகின்றனர். கூலி தொழிலாளர்களான இவர்கள், குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதியில் அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார். அந்த நிலத்தை மீட்டு அரியலூரில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வீட்டுமனை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், அரியலூரை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள், கிராம நிர்வாக அதிகாரி பாபு தலைமையில் மணலி மண்டல அலுவலகத்துக்கு வந்து மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், ‘’அரியலூரில் தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ள அரசு நிலத்தை  மீட்டு அந்த இடத்தில் தங்களுக்கு மனைகளாக பிரித்து இலவசமாக பட்டா வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட உதவி ஆணையர், “வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட நிலத்தை சர்வே செய்து ஆக்கிரமிப்பாக இருந்தால் அதை மீட்டு தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க பரிந்துரைக்கப்படும்’’ என்றார்.

Related Stories: