×

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டப் பணிகளை விரைந்து முடியுங்கள்: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை..!!

சென்னை: தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் அனைத்துத் துறை செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மழைநீர் வடிகால், சாலை புனரமைப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர் பேசிய முதல்வர், சில துறைகளில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த செயல்பாடு ஏற்படாமல் இருப்பதாக அறிகிறேன். இது எங்கும் எப்போதும், எந்த துறையிலும், எந்த சூழலிலும் ஏற்பட கூடாது.

அமைச்சர்கள், துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட நிர்வாகம் ஆகியவை ஒரே நேர்கோட்டில் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் நம்பர் ஒன் இலக்கை நிச்சயமாக அடைய முடியும்  என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசின் துறை வாரியான திட்ட பணிகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை செயலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

2022- 23ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் துறை சார்ந்து எந்த நிலையில் இருக்கின்றன? அதற்கான நிதிகள் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது? திட்டங்கள் சரியாக சென்று சேர்கிறதா? முடியும் தருவாயில் உள்ள திட்டங்கள் எத்தனை? உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. துறைவாரியான திட்ட பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்தும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் தலைமையிலான அனைத்துத்துறை செயலர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. பருவமழை தொடங்கும் முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.


Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin , Tamil Nadu, flood damage, project work, Chief Minister M.K.Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து