ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு பேராதரவு; மக்கள் எழுச்சியை சகித்துக் கொள்ளாத பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது: கே.எஸ்.அழகிரி அறிக்கை..!

சென்னை: மக்கள் எழுச்சியை சகித்துக் கொள்ளாத பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 8 ஆண்டுகளாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பலமுனைகளில் பாதிக்கிற வகையில் செயல்பட்டு வருகிற மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருவதையே தலைவர் ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமைப் பயணத்திற்கான ஆதரவு வெளிப்படுத்துகிறது.

இந்த பயணத்தில் நாளுக்கு நாள் மக்களின் பேராதரவு பெருகி வருகிறது. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பொருளாதார பேரழிவுகள் என தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 6 சதவிகிதத்தை விட சில்லரை பணவீக்கம் அதிகமாக உள்ளது. உணவு, காய்கறிகள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விலையைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே தவறான கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. கச்சா எண்ணெய் விலை கடந்த 7 மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. ஆனால், சர்வதேச விலைக்கேற்ப பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவில்லை. ஆனால், நுகர்வோருக்கு அதன் பலன் கிடைக்கவில்லை. குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை 13.33 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் அடிப்படையில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம்.

கடந்த 7 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும், பணவீக்கம் 6 சதவிகிதமாக இருந்தும் எரிபொருளுக்கான அதிக விலையை நுகர்வோர் ஏன் அதிகமாக கொடுக்க வேண்டும் ? கச்சா எண்ணெய் விலை குறையும் போது எரிபொருள் விலையை குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்க வழி ஏற்படுத்தாதது ஏன் ? பெட்ரோல் மற்றும் டீசல் விலை தேர்தலுக்காக மட்டும் மாற்றி அமைக்கப்படுகிறதா ? அல்லது சர்வதேச சந்தை விலையின்படி மாற்றியமைக்கப்படுகிறது? எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூபாய் 15, எரிவாயு சிலிண்டர் விலையில் ரூபாய் 150 குறைத்து,

நாட்டிலுள்ள நடுத்தர வருவாய் பிரிவு மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் ஆகியோருக்கு உடனே நிவாரணம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றிற்கு 106 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 71 ஆகவும், டீசல் விலை ரூபாய் 55 ஆகவும் இருந்தது. அப்போது விலை குறைப்பு எப்படி நிகழ்ந்தது ? ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 88 டாலராக இருக்கிற போது பெட்ரோல் விலை ரூபாய் 102.63, டீசல் விலை ரூபாய் 94.24, சமையல் எரிவாயு விலை ரூபாய் 1068.50 உயர்ந்திருப்பது ஏன்?

இதன்மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் எரிபொருள் விலையை குறைத்து மக்களின் சுமையை குறைக்க விரும்பாத மக்கள் விரோத அரசாக பா.ஜ.க. செயல்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்றால் கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருட்கள் மீது கலால் வரியாக 77 லட்சம் கோடி ரூபாய் வசூலித்து மத்திய அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. மக்கள் நலனில் கடுகளவும் அக்கறை இல்லாத பல நடவடிக்கைகளின் காரணமாகத் தான் பொருளாதார பேரழிவு ஏற்பட்டு மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

20 வயதிற்குள்ளான இளைஞர்களின் வேலையின்மை 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 42 சதவிகிதம் இளைஞர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். இந்திய ஒற்றுமை பயணம் குறித்து குற்றம் சாட்டுபவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து கேள்வி எழுப்புபவர்கள் மகாத்மா காந்தியை படுகொலை செய்தவர்கள். நாதுராம் கோட்சேவின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் தான் இத்தகைய கேள்விகளை கேட்கிறார்கள். சுதந்திரத்திற்கு பிறகு 52 ஆண்டுகளாக மூவர்ண தேசியக் கொடியை ஏற்றாதவர்கள் தான் இந்த கேள்வியை எழுப்புகிறார்கள்.

எம்.எம். கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் கொலைகளில் தொடர்புடையவர்கள் தான் இந்த கேள்வியை கேட்கிறார்கள். தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பிளவுபட்ட மக்களை ஒன்றுபடுத்துகிறது. மக்களோடு மக்களாக பயணிக்கிறார். மக்கள் துன்பத்தை நேரிடையாக அறிகிறார். அவர் எழுப்புகிற கேள்விகளுக்கு பதில் கூற தயாராக இல்லாத பா.ஜ.க., திசைதிருப்புகிற அரசியலை செய்கிறது. ஆனால், அதில் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது. தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மேற்கொண்டிருக்கிற இந்திய ஒற்றுமை பயணத்திற்கு பின்னாலே கன்னியாகுமரியில் தொடங்கி இந்திய மக்கள் பேராதரவு வழங்கி ஆதரித்து வருகிறார்கள்.

மக்கள் எழுச்சியை சகித்துக் கொள்ளாத பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது. ராகுல்காந்தி அவர்களின் 100 கி.மீ. பயணத்திலேயே பா.ஜ.க.வின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. இதுவே தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியின் தொடக்கமாகும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: