இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 2 பேரை திருமணம் செய்த பெண்: கொலையில் முடிந்த கதை

கடலூர்: சமூக வலைத்தளம் மூலம் பழகி இரண்டுபேரை திருமணம் செய்த பெண்ணால், ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான சக்திவேல் (32). இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சுமன் (25) என்பவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுமனும் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தட்டான்சாவடி பகுதியை சேர்ந்தவர் பூமிகா. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

செல்போனில் அதிகநேரம் செலவிட்டு வந்த பூமிகா சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார். வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் உள்ளிட்டவைகளில் தன்னுடைய போட்டோக்களை வெளியிடுவது இவரது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் இவரது சமூக வலைத்தளங்களை பலரும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். எந்த நேரமும் மனைவி செல்போனில் நேரத்தை செலவிட்டு வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பூமிகா தன் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனிடையே, அவரது சமூக வலைத்தளத்தை பின்தொடர்ந்து நட்பாக பழகி வந்த சுமனுக்கும், பூமிகாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் நேரில் சந்தித்து பழகி வந்தனர். பின்னர் பூமிகா சுமனை திருமணம் செய்துகொண்டார். இதன்பின்னரும் சமூக வலைத்தளம் மூலம் பலரிடம் நட்பாக பேசி பழகி வந்துள்ளார். இரண்டாவது கணவர் சுமனுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் விசாரித்த போது, சுமனின் சொந்த ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சக்திவேலையும் பூமிகா திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால் சக்திவேல் மீது சுமனுக்கு கோபம் ஏற்பட்டது. சக்திவேலை நேரில் சந்தித்து, உனக்கு முன்பாக நான்தான் பூமிகாவை திருமணம் செய்துகொண்டேன். எனவே அவரை விட்டு பிரிந்து செல்வதோடு பூமிகா விவகாரத்தில் இனி தலையிடக்கூடாது என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பூமிகாவை விட்டு பிரிய முடியாது எனவும், முடிந்தால் அவரை அழைத்து செல் என சக்திவேல் சுமனிடம் தெரிவித்துள்ளார். இதில் தகராறு முற்றியதால், பேச்சு வார்த்தைக்கு வந்த சக்திவேலை, சுமன் தனது நண்பர்களோடு சேர்ந்து வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கொலையில் தொடர்புடைய பண்ருட்டியை சேர்ந்த படிஸ்டா குணா, வசந்தகுமார் ஆகிய பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதிதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: