×

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தடையை மீறி மீன் இறக்கிய விசைப்படகுகள்-மீனவர்கள் எதிர்ப்பு

புதுக்கடை : தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில்  மாவட்ட கலெக்டரின் உத்தரவையும்  மீறி  விசைப்படகுகள் மூலம்  மீன் இறக்கி  விற்பனை  செய்ததாக ஒரு  தரப்பு மீனவர்கள் புகார்  கூறியுள்ளனர். தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தின் முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது கடந்த பல ஆண்டுகளாக  தொடர்கதையாக நடந்து வருகிறது. துறைமுகம் செயல்பாட்டுக்கு  வந்த பின்னர்  இதுவரையிலும் 29 உயிரிழப்புகள்  துறைமுக  நுழைவு வாயில்  பகுதியில்  நடந்துள்ளதாக  மீனவர்கள்  தரப்பில் கூறப்படுகிறது. எனவே மீன்பிடி துறைமுகத்தை  மறு சீரமைப்பு  செய்ய வேண்டும்  என  கோரிக்கை  எழுந்தது. இதை ஏற்று  மத்திய, மாநில அரசுகள் ₹245 கோடியில்    சீரமைப்பு  பணிகள்  நடக்க  உள்ளதாக  அறிவித்தன.
இதற்கிடையில் தென்  மேற்கு பருவக்காற்றின்  தீவிரத்தால் மீண்டும் கடல்  சீற்றம் அதிகமானதால் துறைமுக  நுழைவு வாயில்  பகுதியில் மணல்  திட்டுகள்  ஏற்ப்பட்டுள்ளன.

இதனால் ஒரே  வாரத்தில்  இரண்டு  பேர்  உயிரிழந்தனர்.  கடைசியாக  கடந்த வாரம் இனயம் புத்தன்துறை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (64) என்னும்  மீனவர் இன்ஜின் இல்லாத சிறிய வள்ளத்தில் மீன்பிடிக்க சென்று  மீன்பிடித்துவிட்டு  துறைமுகத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது வள்ளம்  கவிழ்ந்து கடலில்  விழுந்துள்ளார். மூன்று நாள் தேடலுக்கு பின்னர் அவரது உடல்  கிடைத்தது. இந்த சம்பவத்தை  துடர்ந்து மீனவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் மீன்பிடித்துறைமுக கட்டுமான பணி தொடங்கி முடியும்  வரை துறைமுகத்தை  மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கை அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 1-ம்  தேதி  முதல்  மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக  மூடினர். இதற்கிடையில்  வெளியூரில்  மீன்பிடிக்க சென்ற  விசைப்படகுகள் மீன்களை இறக்க முடியாமல் முகத்துவாரத்தில் நிறுத்தி வைக்கும்  சூழலுக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக 9 விசைப்படகுகளில் ஒரு கோடி  மதிப்பிலான மீன்கள் தேக்கமடைந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்  பேரில் 9 விசைப்படகில்  தேக்கமடைந்த மீன்கள்  துறைமுகத்தில் இறக்க  உத்தரவிடப்பட்டது.  பின்னர்  மறு   அறிவிப்பு  வரும்  வரையிலும்  துறைமுகம்  மூடுவதாக  அறிவிப்பு  வெளியானது.

இது  தொடர்பாக அங்கு  விளம்பர பலகையும்   அரசு  சார்பில்  வைக்கப்பட்டது. இதற்கிடையில்  நேற்று ஆழ்கடலில்  மீன்பிடிக்க  சென்ற சுமார்  40 க்கும்  அதிகமான  படகுகளில் மீன்பிடித்து  வந்து அவற்றை  இறக்க  முடியாமல்  தேங்கியதாக தெரிய வருகிறது. அவற்றில் சில படகுகள் அரசு  உத்தரவையும்  மீறி துறைமுகத்தை  திறந்து  உள்ளே மீன் இறங்கி விற்பனை செய்துள்ளனர். இதற்கு ஒரு  தரப்பு  மீனவர்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனால்  எதிர்ப்பையும் மீறி மீன்  இறங்கியதால் அங்கு  பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. மேலும்  இந்த  நிலை  தொடர்ந்தால்  அங்கு  சட்ட ஒழுங்கு  பிரச்னை   ஏற்பட வாய்ப்புள்ளதாக  அப்பகுதி  மீனவர்கள்  அச்சத்துடன்  தெரிவித்துள்ளனர்.

  இது  தொடர்பாக அப்பகுதி மீனவர்கள்  கூறுகையில், மீனவர்கள்  தொடர்  போராட்டத்தின்  விளைவாகத்தான் மறு   சீரமைப்பு பணிகள்  நிறைவடையும் வரை மீன்பிடி  துறைமுகத்தை தற்காலிகமாக   மூடுவதாக மாவட்ட  நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இதற்கிடையில்  கேரளாவுக்கு  மீன்பிடிக்க  சென்ற விசைப் படகுகளில் மீன்களை  கொண்டு வந்து  தேங்காப்பட்டணம்  துறைமுகத்தில் இறக்கியுள்ளனர். இதை மீன்வளத்துறை அதிகாரிகள்  கண்டுகொள்ளாமல்  உள்ளனர். அதே  நேரம் கரமடி வள்ளத்தில் மீன்பிடிக்கும் சாதாரண  மீனவர்களின் மீன்களை  துறைமுகத்தில் அனுமதிக்காமல்  கட்ட  பஞ்சாயத்து நடந்து  வருகிறது.

 குறிப்பாக இனயம் மண்டலம் மீனவர்கள் மீன் விற்க சென்ற போது மீன்களை விற்க விடாமல் விரட்டியுள்ளனர். துறைமுகம்  முகதுவாரத்தில் நாளை எதாவது விபத்தோ, உயிர் இழப்போ ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும் பொறுப்பேற்பார்களா?குறிப்பிட்ட  நபர்கள்  மட்டும்  மீன்  விற்க அனுமதிக்கப்படுகிறது. அரசு  இது  தொடர்பாக தீவிர  நடவடிக்கை எடுக்க  வேண்டும்  என  மீனவர்கள்  தெரிவித்தனர்.


Tags : Coconut Pattanam , Pudukadai: Fish unloaded and sold by barges at Tengapatnam fishing port in violation of District Collector's orders.
× RELATED தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு...