×

11 நுண்ணுரம் செயலாக்க மையம் மூலம் குப்பையில் இருந்து தயாரித்த 2 ஆயிரம் டன் உரம் விற்பனை

நாகர்கோவில் : நாகர்கோவிலில் உள்ள 11 நுண்ணுரம் செயலாக்க மையம் மூலம் தயாரித்த உரத்தில் 2 ஆயிரம் டன் உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பை பெரிய அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்றும் முயற்சியில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து, தூய்மை பணியாளர்களிடம் வழங்குமாறு மாநகராட்சி மேயர் மகேஷ் வலியுறுத்தி வருகிறார். அவர் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சியிலும் இதனை வலியுறுத்தி வருகிறார். மேலும் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் இந்தியாவில் சுத்தமான மாநகராட்சியாக விளங்கும் இந்தூர் மாநகராட்சிக்கு சென்று அங்கு குப்பையை எப்படி கையாளுகிறார்கள் என பார்வையிட்டு வந்துள்ளார்.

அவரது ஆலோனையின் பேரில் சில நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் தினமும் சுமார் 100 டன் முதல் 130 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு வலம்புரிவிளை உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் தேங்கி கிடந்தது. இதனை அகற்ற பல்வேறு கட்சிகள், அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேறு இடம் கிடைக்காத நிலையில் வலம்புரிவிளை உரக்கிடங்கில் தேங்கி கிடக்கும் குப்பைகளை பயோமைனிங் முறையில் உரமாக்கும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தியது.

அதன்படி ₹10 கோடியில் பயோமைனிங் முறையில் குப்பைகள் உரமாக்கப்பட்டு வருகிறது. இதனை ஒரு தனியார் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. பயோமைனிங் முறையில் குப்பைகள் அனைத்தும் உரமாக்கிய பிறகு, வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு குப்பைகள் கொண்டு செல்லாத வகையில் நாகர்கோவில் மாநகர பகுதியில் 11 நுண்ணுரம் செயலாக்க மையம் அமைக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு வருகிறது. தற்போது நுண்ணுரம் செயலாக்க மையங்களில் தேவைப்படும் குப்பைகளை அங்கு போட்டுவிட்டு, மீதமுள்ள குப்ைபகள் வலம்புரிவிளை உரமாக்கும் கூடங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. நுண்ணுரம் செயலாக்க மையங்கள்  மூலம் உற்பத்தி செய்யப்படும் உரங்கள் பொதுமக்களுக்கு ஒரு கிலோ 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த உரத்தை விவசாயிகள் மொத்தமாகவும் வாங்கிச்செல்கின்றனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள நுண்ணுரம் செயலாக்க மையங்கள் மூலம் இதுவரை 2 ஆயிரத்து 75 டன் உரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரம் டன் உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிலோ கணக்கில் பார்க்கும் போது 20 லட்சம் கிலோ உரத்தை மாநகராட்சி நிர்வாகம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் சுமார் ₹20 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

அந்த வருவாய் நுண்ணுரம் ெசயலாக்க மையங்களில் வேலை செய்யும் சுமார் 150 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் ஆர்வமுடன் பணி செய்து வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி மேயர் மகேஷ் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். வலம்புரிவிளை குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் பயோமைனிங் முறையில் உரமாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இந்த வருடத்திற்குள் முடிக்கப்பட்டு, அங்கு குப்பை இல்லாத இடமாக்க மாற்றப்படும்.

நாகர்கோவில் மாநகர பகுதியில் 11 நுண்ணுரம் செயலாக்க மையங்கள் உள்ளன. இதன் மூலம் தினமும் காய்கறி கழிவுகள் மற்றும் மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு வருகிறது.
வீடுவீடாக குப்பை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வழங்க வேண்டும். இதனால் குப்பைகளை கையாளுவது எளிதாக இருக்கும்.
 குப்பைகளை சாலையோரம் வீசக்கூடாது. வீசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக ஆக்குவதுடன், அழகான மாநகராட்சியாகவும் மாற்றப்படும் என்றார்.

Tags : Micronuram Processing Center , Nagercoil: 2000 tonnes of compost produced by 11 micro-processing centers in Nagercoil have been sold.
× RELATED அமராவதி வனச்சரகத்தில் இரை தேடி இடம் பெயரும் வனவிலங்குகள்