×

தாணிப்பாறை அருகே நிரந்தர பஸ்நிலையம் அமைக்க வேண்டும்-சதுரகிரி பக்தர்கள் வலியுறுத்தல்

வத்திராயிருப்பு : சதுரகிரி பக்தர்களின் போக்குவரத்திற்காக தாணிப்பாறை தற்காலிக பஸ்நிலையத்தை நிரந்தர பஸ்நிலையமாக்கி அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு, அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் அனுமதி அளிக்கப்படுகிறது.

முக்கிய திருவிழா காலமான ஆடி அமாவாசை, தை அமாவாசை காலங்களில், பக்தர்களின் போக்குவரத்திற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்கள் அனைத்தும், வத்திராயிருப்பிலிருந்து தாணிப்பாறை செல்லும் வழியில் தற்காலிக பஸ்நிலையத்தில் நிறுத்தப்படும். மற்ற காலங்களில் தாணிப்பாறை செல்லும் பஸ்கள், தற்காலிக பஸ்நிலையம் அருகே உள்ள இடத்தில் நிறுத்தப்படும்.
தற்காலிக பஸ்நிலையத்தை நிரந்தரமாக்க வேண்டும்:

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தற்காலிக பஸ்நிலையத்தை நிரந்தர பஸ்நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை இல்லை. மேலும், அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை வருவாய் துறையினர் ஆய்வு செய்து, அவற்றை மீட்டு சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு விஷேச நாட்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தரவேண்டும். தற்போது தாணிப்பாறைக்கு செல்லும் பஸ்களை தற்காலிக பஸ்நிலையத்தில் நிறுத்த வேண்டும்.

இந்த பஸ்நிலையத்தில் பயணிகள் பொருட்களை வைக்கும் அறை, ஆண், பெண் சிறுநீர் கழிப்பிடம், கழிப்பறை, குளியல் அறைகள், உடை மாற்றும் அறைகள், குடிநீர் வசதிகள் மின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். பஸ்நிலையத்திற்கு செல்லும் சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும். மேலும், பஸ்நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியேறி செல்லுவதற்கு மாற்றுவழி ஏற்பாடு செய்ய வேண்டும்.

தாணிப்பாறை விலக்கிலிருந்து தற்காலிக பஸ்நிலையம் வரை உள்ள சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும். கடந்த ஆடி அமாவாசை திருவிழாவின்போது கூட்டம் அதிகமாக வந்ததால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மகாராஜபுரம் விலக்கிலிருந்து மகாராஜபுரம் வரை உள்ள சாலையை அகலப்படுத்தி, வாகனங்கள் சிரமமின்றி சென்று வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுத்தியுள்ளனர்.

Tags : Thaniparai ,Chaturagiri , Vathirayiru: Thanipara temporary bus station has been converted into a permanent bus station for the transport of Chathuragiri devotees.
× RELATED சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்