கரூர் பேருந்து நிலையம் அருகே சிக்னல் பழுதால் வாகனஓட்டிகள் அவதி-சீரமைக்க வலியுறுத்தல்

கரூர் : கரூர் பேரூந்து நிலையம் அருகே உள்ள சிக்னலில் அவ்வப்போது ஏற்படும் பழுது காரணமாக அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். சிக்னலை சரி பார்க்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் பேரூந்து நிலையம் அருகே மனோகரா கார்னர் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த ரவுண்டானாவின் வழியாக கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற அனைத்து பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் சென்று வருகிறது.

இதே போல், இந்த பகுதிகளில் இருந்து கரூர் பேருந்து நிலையம் வரும் வாகனங்களும் ரவுண்டானா வழியாக செல்கிறது. மேலும், இந்த ரவுண்டானா வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்களும் சென்று வருகிறது.முக்கிய சந்திப்பு பகுதியாக மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதி உள்ளது. இந்நிலையில், அவ்வப்போது ஏற்படும் சிக்னல் பழுது காரணமாக வாகன ஓட்டிகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முன்னேறிச் செல்வதில் ஆர்வம் காட்டி செல்வதால் சில சமயங்களில் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, முக்கிய சந்திப்பு பகுதியில் உள்ள ரவுண்டானா பகுதியில் சிக்னல் பழுதின்றி செயல்பட தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: