×

விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் மற்றும் பண்டைய பழங்குடியினருக்கு 1000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு

சென்னை: விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உயிர்கொடுக்கும் வகையில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பாக கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு (Particularly Vulnerable Tribal Groups) வரும் நிதியாண்டில் மேலும் 1000 புதிய வீடுகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில்,  கட்டித் தரப்படும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்துள்ளனர் . மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி மற்றும் திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில், சமதளப்பரப்பில் ஒரு வீட்டிற்கு ரூ.4,37,430/- வீதம்  726 வீடுகளுக்கு ரூ.31,75,74.180/- (ரூபாய் முப்பத்தொரு கோடியே எழுபத்தைந்து இலட்சத்து எழுபத்து நான்காயிரத்து நூற்று எண்பது மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

மலைப்பகுதியில் ஒரு வீட்டிற்கு ரூ.4,95,430/- வீதம் 368 வீடுகளுக்கு ரூ.18,23,18,240/- (ரூபாய் பதினெட்டு கோடியே இருபத்து மூன்று இலட்சத்து பதினெட்டாயிரத்து இருநூற்று நாற்பது மட்டும்) ஆக மொத்தம் 1094 வீடுகள் கட்டுவதற்கு ரூ.49,98,92,420/- (நாற்பத்து ஒன்பது கோடியே தொன்னூற்று எட்டு இலட்சத்து தொன்னூற்று இரண்டாயிரத்து நானூற்று இருபது மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட 1094 வீடுகளை விரைந்து கட்டி முடித்திடத் தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags : Irulas ,Minister ,Kayalvizhi Selvaraj , 1000 new houses, marginalized Ilurs ,ancient tribes, Minister Kayalvizhi Selvaraj
× RELATED ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின...