×

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை-வேளாண்மை உதவி இயக்குனர் ஆலோசனை

பேராவூரணி : தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டின் அறிகுறிகளும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சாந்தி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கற்பகவிருட்சமாமான தென்னை சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் ஏறாத்தாழ 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தென்னையில் காண்டாமிருக வண்டின் தாக்குதலால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் தென்னை விவசாயிகள் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தலாம். காண்டாமிருக வண்டின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக காணப்படுகிறது. தாக்குதலின் அறிகுறிகள் தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்து பாகத்தில் துளையிட்டு மரத்தின் உள்ளே சென்று மொட்டு பகுதியை மென்று விடுகிறது. தாக்கப்பட்ட பாகம் போக எஞ்சிய குருத்து விரியும்போது தென்னை மட்டை முக்கோண வடிவில், சீராக கத்தரியால் வெட்டியது போல் தோற்றமளிக்கும். காண்டாமிருக வண்டு தாக்குதலினால் 10 சதவீத முதல் 15 சதவீதம் மகசூல் குறையும். தாக்கப்பட்ட, மடிந்து போன மரங்களை தோப்புகளிலிருந்து அகற்றி அழித்து விட வேண்டும். குப்பை மற்றும் எருக்குழிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

எருக்குழிகளில் உள்ள முட்டை, புழுக்கள், கூட்டுப்புழுக்களை பொறுக்கி அழிக்க வேண்டும். மெட்டாரைசியம் அனிசோபிலே பச்சைமஸ்கார்டைன் பூஞ்சை 250 மில்லியுடன் 750 மில்லி நீர் சேர்த்து எருக்குழிகளில் தெளிப்பதன் மூலம் வண்டுகள் மற்றும் இளம் புழுக்களை அழிக்கலாம்.மாலை நேரங்களில் விளக்குப்பொறிகளை வைத்து காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். இளம் தென்னங்கன்றுகளுக்கு வேப்பங்கொட்டை தூளையும், மணலையும் 1:2 விகிதத்தில் கலந்து மரம் ஒன்றிற்கு 150 கிராம் வீதம் நடுக்குருத்தின் மூன்று மட்டை இடுக்குகளில் வைக்கலாம். இளம் தென்னங்கன்றுகளுக்கு நாப்தலீன் உருண்டை 3 வீதம் பொடி செய்து மட்டை இடுக்குகளில் இடலாம்.

ஒரு மண்பானையில் 5 லிட்டர் நீருடன் 5கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேர்ந்த கலவையை வைத்து காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.  ரைனோ லூர் இனக்கவர்ச்சி பொறியினை எக்டேருக்கு 5 என்ற விகிதத்தில் வைத்து காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். 5 கிராம் போரேட் மருந்தினை துளையுடன் கூடிய பொட்டலமாக எடுத்து 6 மாத இடைவெளியில் ஆண்டுக்கு இரண்டுமுறை வைக்கலாம் இதுபோன்ற வழிமுறைகள் மூலம் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தலாம் என சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : South ,Sedhubavasaram , Peravoorani: Symptoms of rhinoceros beetle attacking coconut and methods of its control Agriculture
× RELATED தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!