×

காங்கயம் தாலுகாவில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு-சொந்த செலவில் பணம், வேட்டி- சேலை வழங்கிய அமைச்சர்

காங்கயம் : காங்கயத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், தனியார் மண்டபத்தில் 80 கர்ப்பிணிளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.லட்சுமணன் தலைமை தாங்கினார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சமுதாய வளைகாப்பு விழாவினை துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.

மேலும் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1,000ம், மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் மரகதம், காங்கயம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தீபா (பொ), காங்கயம் திமுக நகர செயலாளர் வசந்தம் ந.சேமலையப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.கே.ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் முரளி, நகராட்சி கமிஷ்னர் வெங்கடேஸ்வரன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 இதில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம்பெண்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மேம்படுத்துவது குறித்து கூறப்பட்டது. மேலும் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் உண்ண வேண்டிய உணவு முறைகள் உணவின் அளவு, முழுதானிய உணவுகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள், குழந்தை ஆரோக்கியம் மற்றும் கர்ப்ப கால பராமரிப்பு, கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம், தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் மற்றும் தயார்படுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் எடுத்துக்கூறப்பட்டது.

 கர்ப்பிணிப் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் குறித்த குறிப்பேடு உள்ளிட்டவை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டது. மதிய விருந்தும் வழக்கங்கப்பட்டது. இதில் கர்ப்பிணிப் பெண்கள் காய்கறிவகை உணவு உட்கொள்வது பற்றிய விழிப்புணர்வுக்கு, காய்கறியில் செய்யப்பட்ட பொம்மைகள் விழாவுக்கு வந்தவர் அனைவரும் கவனத்தையும் கவர்ந்த்து.
இதேபோல் வெள்ளக்கோவிலில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கர்ப்பினி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்து 120 சீர்வரிசை வழங்கி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1,000ம், மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.

இதில்  வெள்ளகோவில் நகராட்சி தலைவர் கனியரசிமுத்துக்குமார், துணைத்தலைவர் விஜயலட்சுமி, வெள்ளக்கோவில் நகராட்சி கமிஷ்னர் மோகன்குமார், வெள்ளகோவில் திமுக நகர செயலாளர் சபரிமுருகானந்தன், வெள்ளகோவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துராமலட்சுமி, துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 14 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சமுதாய வளைகாப்பு விழா நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையாக தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் மற்றும் 5 வகை உணவுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும், அரசு மருத்துவமனைகளில் பயன்பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.18ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் சுகாதாரத் துறையின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

 இன்றைய குழந்தைகள் தான் நாளைய சமுதாயம். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம், ஒரு குழந்தையின் வளர்ச்சி கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. குழந்தைகளுக்கு தாய்பால் அவசியம் என்கிற வகையில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டியது அவசியம். கடந்த ஆகஸ்ட் மாதம் 1லிருந்து 7ம் தேதி வரை தாய்பால் வாரமாகவும், செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

குழந்தையின் வளர்ச்சி அதன் வாழ்வின் முதல் வருடத்தில் அதிக அளவில் நடைபெறுகிறது. 2 வயதை அடைவதற்கு முன் குழந்தையின் உடலில் ஏற்படும் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக் குறைபாட்டை திரும்ப சரிசெய்வது என்பது முடியாததாகும். கர்ப்ப கால முன்பின் பராமரிப்பு, குழந்தைக்கு உணவூட்டும் முறைகள், குழந்தை வளர்ப்பு, தடுப்பூசிகள் போன்ற பல தகவல்கள் குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Kangayam taluka , Kangayam : Through the Integrated Child Development Work Program in Kangayam under Social Welfare and Women's Rights Department, Private
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...