குன்னூர் ஐயப்பன் கோயில் பகுதியில் அடர்ந்த முட்புதர்களால் தொடரும் வனவிலங்கு அச்சம்

குன்னூர் : குன்னூர் ஐயப்பன் கோயில் பகுதியில் முட்புதர்கள் அகற்றாமல் புதர்மண்டிக்கிடிப்பதால்  மீண்டும் வனவிலங்கு ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அண்மைகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக கரடிகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்துவிடுகிறது.  இந்த நிலையில் குன்னூர் நகராட்சி 25-வது வார்டில் ஐயப்பன் கோயில் பகுதி  உள்ளது. இங்கு  சமீபத்தில்  குடியிருப்பு அருகே மாலை நேரத்தில் கரடி ஒன்று  வந்தது. கரடியை கண்டதும் அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். அப்போது கரடி அங்கிருந்த பராமரிப்பின்றி விடப்பட்ட பொது கழிப்பறைக்குள் பதுங்கியது.

இது குறித்து வனத்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் கரடி நடமாட்டத்தை கண்காணித்தனர். அடர்ந்த முட்புதர்கள் நிறைந்து காணப்பட்டதால் அருகே செல்லமுடியாத நிலை இருந்தது. அந்த பகுதியில் அருகே குடியிருப்புகள் உள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் கரடியை பிடிக்க குன்னூர் வனச்சரகர் சசிகுமார் தலைமையில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கூண்டு‌ வைத்து ஐந்து நாட்கள் ஆகியும் இதுவரை கரடி சிக்கவில்லை. இருந்தபோதிலும் இரவும் பகலும் கரடியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த பகுதியில் முட்புதர்களை அதிகமாக உள்ளதால் பொது மக்கள் இதனை சீரமைக்க கோரி நகராட்சி மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு ‌தகவல் அளித்தனர். ஆனால் இது வரை நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். கரடி எந்த நேரமும் பொது மக்களை தாக்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  குப்பைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய் சீர் செய்யாததால் மழை காலத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.  எனவே அடர்ந்து வளர்ந்துள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற  வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: