×

மருத்துவப் படிப்பிற்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: புதுச்சேரி அரசு

புதுச்சேரி: நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், நிகழாண்டு இளங்கலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வினை 5,749 பேர் எழுதினர். இதில் 2,899 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து, தேசிய தேர்வு முகமையிடமிருந்து நீட் தேர்ச்சிக்கான புதுச்சேரி மாநில பட்டியலைப்பெற மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே, புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நிகழாண்டு (2022-2023) இளங்கலை மருத்துவம் (எம்பிபிஎஸ்), பல் மருத்துவம் (பிடிஎஸ்), கால்நடை மருத்துவம் (பிவிஎம்எஸ்) உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு, சென்டாக் நிர்வாகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீடு, தனியார் நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களுக்கு, புதுச்சேரி அரசின் சென்டாக் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக செப்டம்பர் 12-ம் தேதி முதல் சென்டாக் இணைய தளம் (www.centacpuducherry.in) வாயிலாக விண்ணப்பங்களை வரவேற்பதாக சென்டாக் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து, செப்டம்பர் 25-ம் தேதி மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பெறப்படும் என்றும், மாணவர்கள் உரிய கல்வி இருப்பிடம் உள்ளிட்ட இதர சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடவும், சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகௌடு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sendag ,Puducherry Govt , You can apply for medical course through Sendag website: Puducherry Govt
× RELATED சனிப்பெயர்ச்சி குறித்து ஆலோசனை தன்னை...