×

திருத்தணி அரசு பள்ளி பழைய கட்டிடத்தில் சமூக விரோத செயலால் மக்கள் அச்சம்

திருத்தணி: திருத்தணி ஆறுமுகசுவாமி கோயில் பகுதியில் செயல்படாமல் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தில் சமூகவிரோத செயல்கள் நடப்பதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆறுமுகசுவாமி கோயில் தெரு பகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அரசு பொது மருத்துவமனை திறக்கப்பட்டது. இதன் பின்னர் இந்த மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியின் கிளை பள்ளி தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரப்பட்டது. டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு காந்தி ரோட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு அங்கிருந்து மாணவர்கள் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டனர். இதனால் பழைய கட்டிடத்தை பயன்படுத்தாமல் பூட்டு போட்டு விட்டனர்.

இந்தநிலையில், தற்போது அந்த கட்டிடம் பராமரிப்பின்றி கிடப்பதால் அங்கு கஞ்சா, மது அருந்துகின்றனர். விபசாரம் நடப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள், காசு வைத்து சூதாட்டம் நடத்துகின்றனர். சமூக விரோத செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் அவ்வழியாக மக்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் அவ்வழியாக செல்வதை தவிர்க்கின்றனர். எனவே, இந்த விஷயத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், திருத்தணி தொகுதி எம்எல்ஏ எஸ்.சந்திரன் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்களும் சமூகநல ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

Tags : Tirutani Government School , People fear due to anti-social behavior in the old building of Tiruthani Government School
× RELATED சென்னையில் அதிகாலையில் மிதமான மழை;...