×

ஆவடி பகுதியில் தூர்வாரிய கழிவுகளை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஆவடி: ஆவடி பகுதியில் புதிதாக தோண்டப்படும் கால்வாய் பள்ளத்தில், அதிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு கழிவுகள் மீண்டும் விழுந்து வருகின்றன. அக்கால்வாய்களில் உள்ள கழிவுகளை முறையாக அகற்ற அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை அருகே ஆவடி, ஜே.பி. எஸ்டேட், ஓம்சக்தி கோவில் அருகே கடந்த வாரம் முதல் மற்றும் 2வது மெயின் ரோட்டில் உள்ள திறந்தநிலை கால்வாய்களில் கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. அப்பணிகளின்போது எடுக்கப்பட்ட கழிவுகள், பள்ளங்களின் அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்டன. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த முடியாததால், அக்கழிவுகள் காய்ந்ததும் அகற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், சாலையோரத்தில் குவிக்கப்பட்ட கழிவுகள் இதுவரை அகற்றப்படவில்லை. தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் திடீரென மழை பெய்து வருவதால், அக்கழிவுகள் மீண்டும் கால்வாய்க்குள் கரைந்து விழுகின்றன. இதனால் கழிவுநீர் கால்வாய்களில் தூர்வாரி சீரமைத்தும், மீண்டும் அதிகளவு கழிவுகள் கலந்து வருகின்றன. அங்கு தண்ணீருடன் கழிவுகள் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை நீடிக்கிறது. எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஜே.பி.எஸ்டேட் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் அகற்றப்படும் கழிவுகளை முறையாக அகற்றி சீரமைக்க சம்பந்தப்பட்ட ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Aavadi , Disposal of waste in Aavadi area: Public demand
× RELATED 195 கிலோ கஞ்சா அழிப்பு