வியாசர்பாடியில் சோபா செட் கடையில் தீ விபத்து

பெரம்பூர்: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டீபன்சன் சாலையில் மகேந்திரன்(58) என்ற நபர் சோபா செட் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் இவரது கடையிலிருந்து கரும்புகை வெளியே வந்தது. உடனடியாக கடையில் இருந்த அவர் வெளியே ஓடி வந்தார். சிறிது நேரத்தில் கடையில் தீப்பற்றி அங்கு இருந்த 2 சோபா செட் மற்றும் இரண்டு மிஷின், ரெக்சின் அட்டைகள் உள்ளிட்டவை எரிந்தன. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் லோகநாதன் உத்தரவின்பேரில் நிலைய அதிகாரி செல்வம் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். முதலில் மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் பஞ்சு மற்றும் நார் போன்ற பொருட்கள் கருகியதால் அந்த கட்டிடம் முழுவதும் புகை பரவி அருகில் இருந்த கடைகளுக்குச் சென்றது.

இதனால் அக்கடையில் இருந்த நபர்கள் ஓடினர். மேலும் கீழ்த்தளத்தில் தீ எரிந்ததால் மேல் தளத்தில் உள்ள டைலர் கடையில் இருந்த கண்ணாடிகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சோபா செட் கடையில் இருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்திற்கு மின் கசிவு காரணமாக அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: