×

சென்னையை விபத்தில்லா நகரமாக்க பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களில் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்: போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் தகவல்

சென்னை: சென்னையை விபத்தில்லா நகரமாக்க பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களில் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் கூடதல் ஆணையர் கபில்குமார் தெரிவித்துள்ளார். சென்னை போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் முக்கிய இடங்களில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக, சென்னை  காவல்துறை அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்து வரும் சூழ்நிலையில், போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கை நபரின் மீது வழக்குப் பதிவு செய்தும் வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த முடியாமல் இருந்த காவல்துறை இப்போது தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. முக்கியமாக, மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், கைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல் உள்ளிட்ட 8 போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அதிக அளவில் வழக்கு பதியப்படுகிறது. இதன் அடுத்தக்கட்டமாக ராங் ரூட்டில் வாகனம் ஓட்டுவதினால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. அதேவேளையில் ராங் ரூட்டில் வாகனங்கள் செல்வதினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் போக்குவரத்து பிரிவுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் மற்றும் வழக்கு பதிவும் செய்கின்றனர்.

குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றமும் இதற்கு வருத்தத்தை தெரிவித்தது. இதற்காக பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வார்டில் ஒரு மாத காலம் வார்டு பாய்களுக்கு உதவியாக  பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் கூறியதாவது: சென்னையை விபத்தில்லா நகரமாக்கவும், வாகனம் ஓட்டுபவர்கள் பாதுகாப்பாகவும் செல்ல சென்னை போக்குவரத்து காவல்துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஐஐடியுடன் இணைந்து அதற்கான அறிக்கையை தயார் செய்து வருகிறோம். மக்கள் தங்களால் முடிந்த அளவு தங்களது குடும்பம் என்ற உணர்வில் பயணம் செய்ய வேண்டும். இருசக்கர வாகனம் இயக்குபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், அதேபோல், நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் உடன் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிய  வேண்டும்.

கடந்த ஆண்டுகளை விட சென்னையில் இரவு நேரங்களில் சாகசத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்துள்ளது. சில நபர்கள் போலீசாருக்கு தெரியாமல் சாகசத்தில் ஈடுபட்டு அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள். அப்படி வெளியிடும்போது அது எங்கள் பார்வையில் வரும்போது சம்பந்தப்பட்ட நபர்கள் மேல் வழக்கு பதிவு செய்வோம். இது மட்டுமல்லாமல் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அடுத்து ஓரிரு மாதங்களில் போக்குவரத்து வார்டன்கள் மூலம் சென்னையில் உள்ள சுமார் 100 பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இது போன்று பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மற்றும் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி குழந்தைகளுக்கு ஓவிய போட்டி போன்ற மாணவர்கள் ஆர்வம் அதிகம் உள்ள விளையாட்டின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Chennai ,Traffic Police ,Kapil Kumar , Road awareness program in schools, colleges and private institutions to make Chennai an accident-free city: Additional Commissioner of Traffic Police Kapil Kumar informs
× RELATED சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...