பரந்தூர் விமான நிலைய பணிகளை மக்களின் தேவைகளை நிறைவேற்றிய பின்பு தொடங்க வேண்டும்: வாசன் பேட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தமாகா பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜி.கே.வாசன் வந்தார். அங்கு மணமக்களை வாழ்த்தினார். பின்பு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையம் தொடர்பாக அப்பகுதி மக்களின் தேவைகளை 100 சதவீதம் பூர்த்தி செய்த பின்புதான் விமான நிலைய பணிகளை அரசுகள் தொடங்க வேண்டும். வளர்ச்சி என்பது தேவை தான் இதில் மாற்று கருத்து இல்லை. காங்கிரசின் பாதயாத்திரை என்பது அந்த கட்சி பலவீனமாக இருப்பதால் ரத யாத்திரை நடத்துகின்றனர்.

இதனால் நாட்டு மக்களுக்கோ, நாட்டுக்கோ எந்தவித நன்மையும் இல்லை. மின் கட்டண உயர்வு என்பது அரசின் மிக மோசமான நடவடிக்கையாக கருதுகிறேன், மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை இல்லை என்றால் தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நெல்கொள் முதல் நிலையங்களை அரசு எடுத்து நடத்த வேண்டும். அதிக வசூல் செய்யக்கூடாது. கச்சா பட்டு விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் குறைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வுக்காக நீட் தேர்வு பயிற்சி மையங்களை அரசு நடத்த முன்வர வேண்டும்.

ஆருத்ரா ஐஎஃப்எஸ் போன்ற போலி நிறுவனங்கள் மூலம் ஏழை, எளிய மக்களை நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறது. இதற்காக தமாகா சார்பில் மக்களை இணைத்து மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். கட்சிகளை தாண்டி மனித நேயத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தை தமாகா நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் மலையூர் புருஷோத்தமன் உடனிருந்தார்.

Related Stories: