×

கேளம்பாக்கம் - சாத்தங்குப்பத்தில் சாலைகளில் சுற்றி திரியும் தெரு நாய்களால் தொல்லை: பொதுமக்கள் அச்சம்

திருப்போரூர்: கேளம்பாக்கம் - சாத்தங்குப்பம் ஆகிய கிராமங்களில் சாலைகளில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பயத்துடனும், மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் ஆகிய இரு கிராமங்களில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, அரசு, தனியார் பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை உள்ளன. இங்குள்ள தெருக்களில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளன. இவை முறையாக கட்டுப்படுத்தப்படாததால் காலப்போக்கில் நூற்றுக்கணக்கில் அதிகமாகிவிட்டன.

இதனால், ஒவ்வொரு தெருக்களிலும் 20 நாய்களுக்கும் மேல் சுற்றி வருகின்றன. குப்பைகளில் கொட்டப்படும் உணவுப் பொருட்களை உண்பதற்காக ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக சண்டையிட்டு தெருவில் புரள்கின்றன. இதனால், அவ்வழியே செல்லும் பெண்களும், பள்ளிக் குழந்தைகளும் அச்சத்தில் ஓட்டமெடுக்கின்றனர். இவர்களை நாய்கள் பின்தொடர்ந்து பதம் பார்க்கின்றன. பள்ளிக்குழந்தைகள் தங்களின் சாப்பாட்டுப் பைகளை கீழே போட்டு விட்டு பயந்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில தெரு நாய்கள் போடும் குட்டிகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுவதோடு, சில குட்டிகள் காயங்களுடன் திரிகின்றன. இவ்வாறு அடிபட்டு இறக்கும் நாய்க்குட்டிகளின் உடல்களை யாரும் அப்புறப்படுத்துவதில்லை. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஊராட்சி நிர்வாகம் முறையாக அனுமதி பெற்று நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதத்தில் அவற்றை புளூகிராஸ் போன்ற தொண்டு நிறுவனங்களின் மூலம் பிடித்து இனப்பெருக்க தடுப்பூசி போட்டு பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kelambakkam ,Chatthanguppam , Kelambakkam - Nuisance by stray dogs roaming on roads in Chatthanguppam: public fear
× RELATED கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி...