ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் 10 ஆண்டுகளாக செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: பயணிகள் கடும் அவதி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பராமரிப்பின்றி 10 ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், பயணிகள் குடிநீரின்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தினமும் ஸ்ரீபெரும்புதூர் நகர பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுக்கபட்டது. ஆனால், ஓரிரு மாதங்கள் மட்டுமே இந்த குடிநீர் நிலையம் இயங்கியது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டாக இந்த குடிநீர் நிலையம் பராமரிப்பின்றி பூட்டப்பட்டுள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அருகில் உள்ள கடைகளில் அதிக விலை கொடுத்து குடிநீர் பாட்டில்கள் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பயனிகள் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் தண்ணீர் வாங்கி குடித்து வருகின்றனர்.

மேலும், பொதுமக்களின் நலனுக்காக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அமைத்து கொடுக்கபட்ட இந்த சுத்திகரிப்பு நிலையத்தை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி முறையாக பராமரிக்கவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, பூட்டப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: