×

கீரப்பாக்கம் ஏரியில் மண் எடுப்பதில் தகராறு கூலி படையை ஏவி லாரி டிரைவர் படுகொலை

கூடுவாஞ்சேரி: கீரப்பாக்கம் ஏரியில் மண் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் கூலி படையை ஏவி படுகொலை செய்யப்பட்டார என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் கிராமம், காந்தி நகர், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பாபு (எ) சுரேஷ்பாபு (35).  லாரி டிரைவர். இவரது மனைி மீனா (22). இதில், மீனா மாற்றுத்திறனாளி.  இவர்களுக்கு ஒன்றரை வயதில் ரேஷ்மா என்ற மகள்  உள்ளார். இந்நிலையில், நல்லம்பாக்கம் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள பெரிய ஏரியில் மண் டெண்டர் விடப்பட்டு, கடந்த 20 நாட்களாக ஏரி மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், ஏரியில் மண் எடுப்பதற்காக பாபு லாரியை எடுத்துக்கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார்.

அப்போது, கீரப்பாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கும், லாரி டிரைவர் பாபுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மேலக்கோட்டையூர் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்காக நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பாபு சென்றுள்ளார். அப்போது, அவரை நோட்டமிட்ட மர்ம கும்பல் இரண்டு ஆட்டோக்களில் வந்து, பாபுவை சுற்றிவளைத்து சரமாரியாக அடித்து, உதைத்துள்ளனர். உடனே, பாபு தனது தம்பிக்கு போன் செய்து தன்னை ஒரு கும்பல் அடிப்பதாக கூறியுள்ளார். இதனை கண்டதும் ஆத்திரமடைந்த அந்த கும்பல் மதுபோதையில் கத்தியை எடுத்து பாபுவை சரமாரியாக வெட்டினர். இதில், பாபு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கேள்விப்பட்டதும் பாபுவின் மனைவி, அம்மா, தம்பி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு  திரண்டு வந்து, பாபுவின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாபுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்த புகாரின்பேரில் தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முக்கிய கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், பாபுவை கொலை செய்த முக்கிய கொலையாளியை கைது செய்து தண்டனை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது அம்மா, மனைவி மற்றும் உறவினர்கள் மறுத்து தாழம்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர், அவர்களிடம் போலீசார் சமரசம் போசினர். அப்போது, முக்கிய குற்றவாளி மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அங்கிருந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இது குறிதது தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Keerappakkam , An AV lorry driver killed a mercenary force in a dispute over digging mud in Keerappakkam lake
× RELATED கல்குவாரியில் செல்பி எடுத்தப்போது...