கொளத்தூரில் ரூ.111.80 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பெரம்பூர்: ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்கிறேன் என கொளத்தூரில் நடைபெற்ற புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வரும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்து பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்தார். முதலாவதாக கொளத்தூரில் இயங்கி வரும் கபாலீஸ்வரர் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரேற்று வாரியத்திற்கு சொந்தமான ஜவகர் நகர் 70 அடி சாலையில் உள்ள இடத்தில் ரூ.24.71 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பணிமனையினை திறந்து வைத்தார்.

பின்னர் வெற்றி நகர், வரதராஜன் தெரு, வள்ளியம்மை தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பழுதடைந்த பழைய குடிநீர் குழாய் மாற்றி புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியை ரூ.78.44 லட்சம் மதிப்பீட்டில் துவக்கி வைத்தார். தொடர்ந்து எஸ்.ஆர்.பி காலனி வடக்கு திருவிக நகர் 4வது தெரு அருகில் கழிவுநீர் உந்து ஏற்று நிலையம் கட்டுமான பணி மற்றும் எஸ்.ஆர்.பி கோயில் வடக்கு திருவிக நகர் 4வது தெருவில் இருந்து கென்னடி சதுக்கம் கழிவுநீரகற்று நிலையம் வரை கழிவுநீர் உந்து குழாய் பதிக்கும் பணியினை ரூ.91.72 லட்சம் மதிப்பில் துவக்கி வைத்தார். மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரமணா நகரில் உள்ள கௌதமபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 840 புதிய குடியிருப்புகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை மற்றும் வீட்டு சாவியை வழங்கினார். ரூ.111.80 கோடி மதிப்பீட்டில் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

அப்போது பொதுமக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கொளத்தூர் தொகுதி மக்கள் என்றால் எனக்கு உற்சாகம், மகிழ்ச்சி வருவது உண்மை தான். தொடர்ந்து உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து என்னை தேர்ந்தெடுத்து வருகிறீர்கள். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பார்க்காமல் தொடர்ந்து என்னை வெற்றி பெற செய்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களை சந்திக்கும் போது மகிழ்ச்சி தானாக வந்துவிடும். சில நேரங்களில் சோர்வு ஏற்பட்டால், கொளத்தூர் தொகுதி வந்தால் சரியாகி விடும். கொளத்தூர் தொகுதி மக்களை சந்தித்தால் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் வந்துவிடும். அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சென்னையில் குடிசைகள் அதிகமாக இருந்தது. ஆகவே ஆங்காங்கே மழை பெய்தால் மக்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். வெயில் காலத்திலும் வெயிலை தாங்க முடியாமல் தீப்பற்றக் கூடிய சூழல் ஏற்பட்டது.

அல்லது சமையல் செய்யும் நேரத்தில் எதிர்பாராத விபத்தில் தீ விபத்து ஏற்பட்டு குடிசைகள் எரித்தது. இதை எப்படி சரி செய்வது என அண்ணா யோசித்து வீடுகள் எரியாத வகையில் ஆஸ்பாட்டா ஷீட் மூலம் வீடுகள் கட்டப்பட்டன. மீண்டும் மழை பெய்யும் போது மக்கள் சிரமம் அடைந்தனர். அதன்பின் அண்ணா மறைவிற்கு பின் ஆட்சி பொறுப்பு ஏற்ற கலைஞர், இந்தியாவில் முதல்முறையாக குடிசை மாற்று வாரியத்தை ஏற்படுத்தி தரமான வீடுகளை கட்டிக்கொடுத்தார். தற்போது அத்திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய குடியிருப்புகளை திறந்து வைக்கும் நிகழ்வில் மக்கள் முகங்களில் மகிழ்ச்சியை, மலர்ச்சியை பார்க்கிறேன். வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு. அதை நிறைவேற்றுவதில் நாங்கள் இருந்துள்ளோம் என்பது நிறைவாக இருக்கிறது. குடிசையை மாற்றி கட்டிடம் கட்ட வேண்டும் என்பது மட்டும் நோக்கம் அல்ல.

நகர்புற மக்களின் வாழ்க்கையும், வாழ்விடமும், வாழ்க்கை தரமும் மேம்பட வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். சில மாநிலங்களில் பெரிய விழா நடைபெறும்போது, வெளிநாட்டில் இருந்து தலைவரை அழைந்து வந்து அவர்களுக்கு குடிசைகள் தெரியக்கூடாது என தார்ப்பாய்களை போட்டு மறைக்கும் நிலை இருக்கிறது. நம் மாடல் மறைக்கும் மாடல் அல்ல. திராவிட மாடல். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா. அடுத்து வந்த கலைஞர் ஏழையின் சிரிப்பில் அண்ணாவை காண்போம் என்றார். இப்போது ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்போம் என்பது தான் என் உணர்வு. ஏழைகளின் முகத்தில் மலர்ச்சியை காணும் வகையில் திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ், அரசு முதன்மை செயலாளர் ஹித்தேஸ்குமார், எஸ்.மக்வானா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: