×

அர்ச்சனை, அபிஷேகம் உள்ளிட்ட இதர சேவைக்கு 500 கோயில்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் கட்டணம் வசூல்: அறநிலையத்துறை அறிவிப்பு

காஞ்சிபுரம்: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 கோயில்களில் அர்ச்சனை, அபிஷேகம் உள்ளிட்ட இதர சேவைகளுக்கு கிரெடிட், டெபிட் கார்டு மூலம் கட்டணம் வசூல் செய்யும் முறை அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 49 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில் பழநி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்பட 4000 முக்கிய கோயில்கள் அடங்கும். இந்த கோயில்களுக்கு தினமும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசத்துக்காக வருகின்றனர்.

இவ்வாறு வரும் பக்தர்கள் அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் இதர சேவைகளுக்கான கட்டணங்களை பணமாக செலுத்தி வந்தனர். அதே நேரத்தில் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் சில்லரை தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால்  டிக்கெட் கட்டணத்தை செலுத்துவதில் கடும் சிரமம் உள்ளது. எனவே, கட்டணம் வசூலிப்பதில் மின்னணு முறையை பயன்படுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கைகள் விடுத்து வந்தனர். பக்தர்களின் கோரிக்கையை கவனமுடன் பரிசீலித்த இந்து சமய அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது பக்தர்கள் சிரமமின்றி கட்டணம் செலுத்தும் வகையில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டுவர அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக, பழநி முருகன் கோயிலில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 கோயில்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எஸ்பிஐ வங்கி நிர்வாகத்துடன் அறநிலையத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் வங்கி நிர்வாகம் சார்பில் பணம் வசூலிக்கும் இயந்திரம் கோயில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தொடர்பாக கோயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதையடுத்து சுமார் 500 கோயில்களில் இந்த புதிய முறை அமலுக்கு வரும் என்று  அறநிலையத்துறை உயர் அதிகாரி தெரிவித்தனர்.


Tags : Archanai ,Charity Department , Charges through credit and debit cards in 500 temples for services including archanai, abhishekam: Charities Department notification
× RELATED அருப்புக்கோட்டையில் மீனாட்சி கோயில்...