×

எரியும் காக்கி சீருடை காங். புகைப்படத்திற்கு பாஜ கடும் கண்டனம்

புதுடெல்லி: காக்கி சீருடை தீப்பிடித்து எரிவது போன்று காங்கிரஸ் வெளியிட்ட புகைப்படத்திற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 7ம் தேதி தொடங்கினார்.  இப்பயணம் 5வது நாளான நேற்று முன்தினம் கேரளாவில் கால் பதித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடையான காக்கி கால்சட்டை தீப்பிடித்து எரியும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. அதில், ‘வெறுப்பின் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கவும், ஆர்எஸ்எஸ், பாஜ செய்த சேதத்தை சீர்படுத்துவோம். படிப்படியாக இலக்கை அடைவோம்’ என பதிவிடப்பட்டுள்ளது. அதன் கீழ், இந்திய ஒற்றுமை பயணம் முடியும் காலத்தை மறைமுகமாக குறிப்பிட்டு ‘இன்னும் 145 நாட்களே’ என்று பதிவிட்டுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, ‘‘தற்போது காங்கிரஸ் யாத்திரை நடைபெறும் கேரளாவில் ஆர்எஸ்எஸ், இந்துத்துவா தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை வெளியிட்டிருப்பதன் மூலம் காங்கிரஸ் வன்முறையை தூண்ட முயற்சிக்கிறது. தீயிலிடுவது ஒன்றும் காங்கிரசுக்கு புதிதல்ல. காங்கிரஸ் ஆட்சியில் 1984ம் ஆண்டு சீக்கிய கலவரத்தின் போது பஞ்சாப் பற்றி எரிந்தது அனைவருக்கும் தெரியும். இது ஒற்றுமை பயணம் அல்ல, தேசத்தை உடைக்கும் பயணம்,’’ என்று தெரிவித்தார்.


Tags : Kong ,BJP , Flaming, khaki uniform, Cong. Photo, Party, Condemnation
× RELATED தேர்தல் பத்திரம் முறைகேடு...