போரில் திடீர் திருப்பம் எல்லை வரையிலும் ரஷ்யா விரட்டியடிப்பு: உக்ரைன் கை ஓங்குகிறது

கார்கிவ்: ஒரே நாளில் 20 ராணுவ நிலைகளை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்ததாகவும் அங்கிருந்த ரஷ்ய படையினரை எல்லை வரை விரட்டியடித்ததாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.உக்ரைன்-ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய போர், 200 நாட்களை கடந்து தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் உக்ரைனின் ராணுவ கட்டமைப்பை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்தியது ரஷ்யா, பின்னர் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பல முக்கிய நகரங்கள் ரஷ்யா வசமானது. இவற்றை மீட்க உக்ரைன் தொடர்ந்து போரிடுகிறது.

இந்நிலையில், உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இசியம், குபியன்ஸ்க் மற்றும் பலக்லியா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் வசமாக்கியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உக்ரைன் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் 20 ராணுவ நிலைகள் மீண்டும் உக்ரைன் வசம் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்த வீரர்கள் எல்லை வரை விரட்டியடிக்கப்பட்டனர்,’ என்று கூறியுள்ளது. இப்போரில் திடீர் திருப்பமாக உக்ரைனின் கை ஓங்கியுள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத ரஷ்ய படைகள், கார்கிவ்வின் முக்கிய மின் நிலையங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் மின் விநியோகம் தடைபட்டு, அந்நகரமே இருளில் மூழ்கி உள்ளது.

Related Stories: