நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை-மெல்போர்ன் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை பல்கலைக் கழகம்- மெல்போர்ன் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து உயர்கல்விக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தமிழக முதல்வர் அறிமுகம் செய்துள்ள நான் முதல்வன் திட்டமும் தமிழகத்தில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில்,அந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களுக்கு ஏற்ப வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் தமிழக பல்கலைக் கழகங்களும் இணைந்து செயல்படுவது, கல்வி, மாணவர் பரிமாற்றங்களை செய்து கொள்வதற்கான வாய்ப்புகளையும் அரசு உருவாக்கியுள்ளது.

அதன் பேரில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழகத்துடன் சென்னைப் பல்கலைக் கழகம் இணைந்து கல்வி பரிமாற்றங்களை மேற்கொள்கிறது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அந்த நிகழ்வில் மெல்போர்ன் பல்கலைக் கழக துணை வேந்தர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர்.  இது குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  கூறியதாவது: உயர் கல்வியில் வெளிநாடுகளில் இருக்கின்ற பல்கலைக் கழகங்களோடும் தொடர்பு கொள்ள வேண்டும்  என்று ‘நான் முதல்வன் திட்டத்தில்’ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் சென்னை பல்கலைக் கழகத்தோடு இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து மெல்போர்ன் பல்கலைக் கழகத்தை சேர்ந்தவர்களுடன் தமிழக உயர்கல்வித்துறையும் சேர்ந்து ஒப்பந்தம் செய்கின்றனர். ஆஸ்திரேலியா சார்பில் அதன் கான்சலேட், மற்றும் மெல்போர்ன் பல்கலையின் துணைவேந்தர் ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.  அவர்கள் இன்று (நேற்று) சென்னை பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.  மற்ற பல்கலைக் கழகங்களுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதன் மூலம் இருநாடுகள் இடையே மாணவர்கள் பரிமாற்றம், கல்விக்கான பாடத்திட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

Related Stories: