அதிமுக பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடத்தப்படும்: எடப்பாடி பேட்டி

சென்னை: அதிமுக பொதுக்குழுவை விரைவில் கூட்டி, பொதுச் செயலாளருக்கு உரிய தேர்தல் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம், இடைப்பாடியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: உச்சநீதிமன்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளது. விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டி,பொதுச் செயலாளருக்கு உரிய தேர்தல் நடக்கும். பெங்களூரு புகழேந்தி ஏற்கனவே அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர். கட்சிக்கு எதிரான விரோத செயல்களில் ஈடுபட்டதால்,அவரை நீக்கினோம். அவர் மக்கள் செல்வாக்கு இழந்த நபர்.  வார்டு உறுப்பினரை விட குறைவான வாக்கு வாங்கிய புகழேந்தியை, விவாத மேடையில் பேச வைக்கிறார்கள். தகுதியான நபர்களை அமர வைத்து பேச வைக்கவேண்டும். பெங்களூருவில் அதிமுக அழிவதற்கு அடித்தளம் வகித்தவர் புகழேந்தி.

நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து,கட்சி பொதுக்குழு தான் முடிவு எடுக்கும். சிலர் நீதிமன்றம் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி கட்சியில் சேர்ப்பது? தற்போது மின்சார  கட்டணம் 34 சதவீதம்  உயர்த்தப்பட்டிருக்கிறது. 2026ல் பார்த்தால் இன்னும்  18% கூடுதலாக  கட்ட வேண்டி வரும். மின்கட்டண உயர்வை கண்டித்து,வரும் 16ம் தேதி மாவட்ட  தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சட்டமன்றத்தில் தீர்க்க முடியாத 10 திட்டங்களை முதலமைச்சர் கேட்டுள்ளார். 10 திட்டங்களை சட்டமன்ற வாரியாக கொடுத்துள்ளோம். சசிகலா சுற்றுப்பயணத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Stories: