மாணவர்கள் பள்ளி சீருடையுடன் மது அருந்துவது அதிர்ச்சி தருகிறது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை

மதுரை: மாணவர்கள் பள்ளி சீருடையுடன் மது அருந்துவது அதிர்ச்சியைத் தருகிறது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘‘தமிழகத்தில்  மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துகள், உயிரிழப்பு ஏற்படுகின்றன. எனவே, தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது என்றும், மதுவின் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு அறிந்திட செய்திடவும், மதுபான விலைப்பட்டியல் வைக்கவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்து புகார் அளிப்பதற்கான தொடர்பு எண் உள்ளிட்ட விபர பலகையை கடைகளில் வைக்கவும், மதுவில் சேர்த்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட விபரங்களை தமிழில் தெரியப்படுத்தவும், விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரை மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் நீதிபதிகளிடம் வழங்கப்பட்டன. அப்போது நீதிபதிகள், ‘‘பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவதை பார்க்கும்போது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்’’ என்றனர். பின்னர், மனுதாரர் தரப்பில் மேலும் விபரங்களை தாக்கல் செய்யவும், அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கவும் கூறி விசாரணையை

2 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: