×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3வது கட்ட நகைகள் சரிபார்ப்பு

சிதம்பரம்:  சிதம்பரம் நடராஜர் கோயிலில், நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சாமிகளுக்கு ஏராளமான தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு நகைகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும் தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சரிபார்ப்பு மற்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 22ம் தேதி முதல் கட்டமாக இந்த பணிகள் துவங்கியது. இதுவரை 2 கட்டங்களாக கடந்த 2ம் தேதி வரை 8 தினங்கள் இந்த நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணிகள் நடந்தது. அப்போது கடந்த 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நடராஜர் கோயிலுக்கு வந்த பல்வேறு நகைகள் மற்றும் காணிக்கைகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் கோயிலில் உள்ள ஆவணங்களை பார்வையிட்டு அதன்படி நகைகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நேற்று 3வது கட்டமாக நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணிகள் நடந்தது. 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் பங்கேற்று, 2015ம் ஆண்டுக்குப் பிறகு கோயிலுக்கு வந்த நகைகள் குறித்த ஆவணங்களை பார்வையிட்டு, அதில் உள்ளபடி நகைகள் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்தனர். 3வது கட்டமாக 9வது நாளாக நேற்று துவங்கியுள்ள இந்த ஆய்வு பணி இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என இந்து சமய அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


Tags : Chidambaram Nataraja Temple , 3rd Phase Jewelry Verification at Chidambaram Nataraja Temple
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் புராதன...