×

ஞானவாபி வழக்கில் விசாரணை தொடர்ந்து நடக்கும்: வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு

வாரணாசி: ஞானவாபி மசூதி வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் மசூதி தரப்பில் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தும் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி 5 இந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதனை வீடியோவாக பதிவு செய்யவும் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அன்ஜூமான் இண்டஜமியா மஸ்ஜித் சார்பில் தாக்கல் செய்த மனுவில், ஞானவாபி மசூதி வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று கூறப்பட்டிருந்தது.

இதனிடையே, கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் இருந்தது கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து முடிவு செய்ய உத்தரவிட்டது. இந்த மனு மீது மாவட்ட நீதிமன்றம் முதலில் விசாரணை நடத்தி வந்தது. இதில் இருதரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், நேற்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய மாவட்ட நீதிபதி ஏகே. விஷ்வேஷ், ஞானவாபி வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெறும். மசூதி தரப்பில் ஆஜரான மனு நிராகரிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார். மேலும், வழக்கு விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags : Ganawabi ,Varanasi , Gnanavabi case trial to continue: Varanasi court verdict
× RELATED மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜ அனுமதிக்காது ; ஜே.பி.நட்டா பிரசாரம்