×

அரசு சார்பில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை அனைத்து மாவட்டங்களிலும் கபடி போட்டி: சென்னையில் இறுதி போட்டி; முன்பதிவை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு சார்பில் அக்டோபர் மாதம் முதல்  டிசம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் கபடி போட்டி நடக்கிறது. மாநில அளவிலான இறுதி  போட்டிகள் பிரமாண்டமான அளவில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில்  சென்னையில் நடைபெறும் என்று கூறி, இதற்கான முன்பதிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நேற்று நடந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் மற்றும் உயரிய ஊக்கத்தொகை வழங்கி பேசியதாவது: உலகமே வியந்து பார்க்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திக் காட்டினீர்கள். அடுத்ததாக டென்னிஸ் போட்டிக்கு தயாராகி வருகிறீர்கள். அமைச்சர் மெய்யநாதன் ஒரு ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார். தனது துறையை என்றும், எப்போதும் துடிப்போடு வைத்திருக்க வேண்டும் என்று அவர் நினைத்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

திராவிட மாடல் என்ற குறிக்கோளின்படி அனைத்து துறையும் வளர வேண்டும் என்பது எங்களது இலக்கு ஆகும். அதில் விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 187 நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் தமிழகத்தில், சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்க வந்தார்கள். தமிழகத்தை உலகமே பார்த்து வியந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டியானது கிராமங்கள் முதல், நகரங்கள் வரை நம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆர்வத்தை இன்னும் தூண்டும் விதமாக, தமிழ்நாடு அரசின் பெரும் முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ள உலக மகளிர் டென்னிஸ் போட்டியும் சென்னையில் இன்று (நேற்று) தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த பேரார்வத்தினை மேலும் வளர்க்கும் வகையில் பல்வேறு விளையாட்டுகள் அடங்கிய ‘முதலமைச்சர் கோப்பை போட்டி’களுக்கான முன்பதிவையும் இன்று தொடங்கி வைப்பதில் நான் பெருமைப்படுகிறேன். செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நான் சொன்னமாதிரி நம்முடைய பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி மற்றும் சிலம்பம் ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கபடி போட்டிகளுக்கான முன்பதிவு இன்றைக்கு தொடங்குகிறது. பிற போட்டிகளுக்கான முன்பதிவும் படிப்படியாக துவங்க இருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் முதல் இப்போட்டிகள் அனைத்து மாவட்டங்களில் நடைபெறும். மாநில அளவிலான இறுதி போட்டிகள் பிரமாண்டமான அளவில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சென்னையில் நடைபெறும். அதாவது செப்டம்பர் மாதம் முதல் அடுத்த 6 மாத காலங்களில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு போட்டிகள் நடக்க இருக்கின்றன.

முதல் முறையாக இப்போட்டிகள் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் நடக்க இருக்கிறது. ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என இருபாலரும் பங்கேற்கும் வகையில் இது நடத்தப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி பொங்கல் வரைக்கும் நடக்கும். தமிழர் திருநாளாம் தைத்திருநாள், கலையும் பண்பாடும் மட்டுமின்றி தமிழர்களின் விளையாட்டுகளும் கொண்டாடப்படும் பெருநாளாக அது அமையும். இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் மாணவ மாணவியரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்த்து, அவர்களுக்கு உயரிய பயிற்சிகள் வழங்கவும், தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் வெற்றி பெற தயார் செய்யவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மேலும், “ஆடுகளம்” - விளையாட்டு வீரர்களுக்கான தகவல் மையமானது, அவர்களின் கோரிக்கைகள், ஆலோசனைகள் புகார்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்து அவற்றுக்கான மேல் நடவடிக்கைகளையும், தீர்வுகளையும், விரைவாக வழங்கிடும் மையமாக இது அமையும். ஏற்கனவே நடந்து முடிந்துள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களுக்கு, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் கிராண்ட் மாஸ்டர்கள் மூலம் நேரடி மற்றும் இணையவழி பயிற்சிகள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி கொடி அணிவகுப்பில் உலகஅணிகளை வழி நடத்தி சென்ற, நம்முடைய அரசு பள்ளிகளை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பலரும், வரும் காலங்களில் இதுபோன்ற சர்வதேச போட்டிகளில், போட்டியாளராக பங்கேற்று வாகை  சூட வழி ஏற்படும்.

சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுக்களை ஊக்கப்படுத்துவதை போல தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் விளையாட்டுக்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கும் தகுந்த ஊக்கம் அளித்திட நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் அடையும் வெற்றியும், பெருமையும் உங்களுக்கானது மட்டுமல்ல, தமிழ்நாடும், இந்தியாவும் அடையக்கூடிய வெற்றி. எனவே, உங்களது கடமையும் பெரிது, உங்களுடைய பொறுப்பும் பெரிது. அதை உணர்ந்து தடைகளை தகர்த்து, சாதனைகளை படைத்திடுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சிவ.வீ. மெய்யநாதன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எழும்பூர் தொகுதி எம்எல்ஏ பரந்தாமன், தலைமை செயலாளர் இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அபூர்வா உள்பட பலர் பங்கேற்றனர்.

* 1,130 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.16.28 கோடி ஊக்கத்தொகை
நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் நான்கு முக்கியமான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
* தமிழ்நாட்டின் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான  விருதுகளை வழங்குதல்.
* பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலானபோட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்குதல்.
* முதலமைச்சர் கோப்பைபோட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கி வைத்தல்
* ஆடுகளம் - விளையாட்டு வீரர்களுக்கான தகவல் மையம் ஆகிய நான்கு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடந்தது.
* ஊக்கத்தொகை வழங்கப்படாமல் இருந்த சாதனையாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு விருதுகளும் ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறோம். இன்றைக்கு 1,130 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.16.28 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றார் முதல்வர்.




Tags : Kabaddi ,Chennai ,Chief Minister ,M.K.Stal , Kabaddi tournament organized by the government from October to December in all districts: finals in Chennai; Chief Minister M.K.Stal's announcement by starting the reservation
× RELATED 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்...