×

அதிமுக அலுவலக வழக்கு ஓ.பன்னீர்செல்வம் மனு தள்ளுபடி: எடப்பாடியிடம் சாவியை ஒப்படைக்கலாம் என்ற உத்தரவு செல்லும்; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கலாம் என்ற ஐகோர்ட்டின் உத்தரவு செல்லும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடையே யாருக்கு அதிகாரம் என்ற உச்சபட்ச மோதல் எழுத்துள்ள நிலையில், கடந்த ஜூன் 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் அன்றைய தினமே அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் உள்ளே நுழைந்தார். அங்கு நடந்த வன்முறையில் கார், வேன் உள்பட பல வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து சட்டம்- ஒழுங்கு பிரச்னையை அடிப்படையாக கொண்டு போலீசார் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த்துறை ஆர்டிஓ சீல் வைத்தார். தொடர்ந்து, அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியாக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘‘அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டதோடு, சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என உத்தரவிட்டது.

இந்நிலையில் அதிமுக அலுவலக சாவி விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘‘இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் விரிவான விசாரணை நடத்தாமல் எந்தவித தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்கிறது. இருப்பினும் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்தது தொடர்பாக எல்லைக்கு உட்பட்ட வருவாய்த்துறை ஆர்டிஓ மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என கடந்த மாதம் 18ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து, அனைத்து தரப்பிலும் இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ‘‘அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட முடிவு என்பது அந்த பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வன்முறைக்கு பின்னர் எடுக்கப்பட்டது. சட்டம் -ஒழுங்கை மீட்டெடுக்க தான் கட்சி அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதிமுக அலுவலகம் அமைந்துள்ள இடம் குடியிருப்புகள் நிறைந்த பகுதி. அங்கு நடந்த வன்முறை தொடர்பான புகார் கிடைத்த பின்னரே சட்டம் -ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக ராயப்பேட்டை பகுதியில் அதிமுக கட்சியினரிடையே ஏற்பட்ட வன்முறையை அடக்கவில்லை என்றால், அது மாநிலத்தின் பல பகுதிகளிலும் பரவும் அளவுக்கு வாய்ப்பு இருந்தது என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட், ‘‘கட்சியின் அலுவலகத்தை சீலிடுவது எந்த வகையானது என கேள்வி எழுப்பியதோடு, அரசியல் கட்சியின் அலுவலகத்தை சீலிடுவது என்பது சாதாரண விவகாரம் அல்ல என கருத்து தெரிவித்தார். மேலும் ஜனநாயக வழியில் அல்லாமல் அரசியல் கட்சி செயல்படுவதை ஏற்க முடியுமா. ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் அவரால் எப்படி உரிமை கூற முடியும். இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் நீங்கள் மீண்டும் சிவில் சூட் மனு போட்டு அலுவலகத்தை மீட்க சட்ட வழிகளை நாடலாமே என்று ஓபி.எஸ் தரப்புக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதை தொடர்ந்து, அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ண குமார், ‘‘அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இப்போதும் ஓ.பன்னீர்செல்வம் தான் இருந்து வருகிறார். அதனால் அலுவலகம் தொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சாவியை கேட்கும் உரிமை அவருக்கு உள்ளது என தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘அதிமுக அலுவலகத்தின் உள்ளே போகிறோம் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக தற்போதைய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் என்பவர் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக தலைமை அலுவலக சாவியை ஒப்படைக்கலாம் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது. அதனால், இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் வரும் நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக சிவில் சூட் மனுவை தாக்கல் செய்து தனக்கான முறையீட்டை வைக்கலாம். அப்போது உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது எந்த வகையிலும் பிரதிபலிக்காது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். இதில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கலாம் கூறியது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. அதிமுக அலுவலகத்தின் உள்ளே போகிறோம் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக தற்போதைய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் என்பவர் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Tags : AIADMK ,O. Panneerselvam ,Edappadi ,Supreme Court , AIADMK Office Case O. Panneerselvam Petition Dismissal: Order to hand over keys to Edappadi; Supreme Court action verdict
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...