சில மாநிலங்களில் குடிசைகளை மறைக்கும் மாடல் ஆட்சி நடைபெறுகிறது: குஜராத் மாடலை தாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: சில மாநிலங்களில் குடிசைகளை மறைக்கும் மாடல் ஆட்சி நடைபெறுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று (12.9.2022) சென்னை, கொளத்தூரில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கௌதமபுரம் திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர்; தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடங்களை இன்று நான் உங்கள் மத்தியில்  திறந்து வைத்திருக்கிறேன். 111 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய கட்டடத்தை திறந்து வைத்திருக்கிறேன். 840 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு இன்று குடியிருப்புதாரர்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இந்த கட்டடத்தை நான் திறந்து வைத்திருக்கிறேன்.

நம்முடைய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. நேரு அவர்கள் பேசுகிறபோது ஒரு கருத்தை எடுத்துச் சொன்னார், தமிழ்நாட்டில் எங்குதான் நம் முதலமைச்சர் சுற்றிக் கொண்டிருந்தாலும், இந்த கொளத்தூர் தொகுதி என்றால் அவருக்குத் தானாக ஒரு உற்சாகம் வந்துவிடும், ஒரு மகிழ்ச்சி வந்துவிடும். உண்மைதான், ஏன் வராது? மூன்று முறை என்னை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து, அது எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும், என்னை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் உங்களில் ஒருவனாக நினைத்து, என்னைத் தொடர்ந்து வெற்றிபெற வைத்திருக்கிறீர்கள்.

ஆக, அப்படிப்பட்ட உங்களைச் சந்திக்க வரும்போது எனக்கு மகிழ்ச்சி தானாக வந்துவிடும், ஒரு எழுச்சியும் வந்துவிடும். சில நேரங்களில் எனக்கு சோர்வு ஏற்பட்டால், இந்தப் பகுதி வந்தவுடன் அந்த சோர்வெல்லாம் உடனடியாக கலைந்து போய்விடும். ஆகவே, அப்படிப்பட்ட இந்தக் கொளத்தூர் தொகுதியில் இருக்கக்கூடிய உங்களையெல்லாம் சந்திக்க வந்திருப்பதில் நான் தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கக்கூடியவன். இங்கு நம்முடைய அமைச்சர் அவர்கள் குடிசை மாற்று வாரியத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய திரு. அன்பரசன் அவர்கள், இது இப்போது தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றியிருக்கிறோம்.

முதன்முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சிக்கு அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது,  அறிஞர் அண்ணா அவர்கள், எங்கு பார்த்தாலும் குறிப்பாக சென்னையில், குடிசைகள் அதிகமாக இருக்கிறது, ஆகவே, ஆங்காங்கு மழை பெய்தாலும் வெள்ளத்தில் சிக்கிக் கொள்கிறார்கள், கொடுமையான வெயில் வரும்போது, கொடுமையாக கொளுத்தும் அந்த வெயிலைத் தாங்க முடியாத அளவிற்கு தீப்பற்றக்கூடிய ஒரு சூழ்நிலைகூட ஏற்பட்டு விடுகிறது அல்லது சமையல் செய்கின்ற நேரத்தில், எதிர்பாராத வகையில் தீ விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது, ஒரு வீட்டில் தீப்பிடித்தால் அது பக்கத்து வீடுகளுக்கு விரைவாக பரவி விடுகிறது, இதை எப்படி சரி செய்வது என்று அண்ணா அவர்கள் யோசித்து,

எரியாத வீடுகள் அதற்குரிய ஆஸ்பெஸ்டாஸ் அமைப்பில் முதன்முதலில் அந்த வீடு கட்டக்கூடிய திட்டத்தை அண்ணா அவர்கள் தொடங்கினார்கள். அப்படி அந்தத் திட்டம் தொடங்கி ஓரளவுக்கு திருப்தி ஏற்பட்டாலும், முழு அளவுக்கு அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. ஆக, அதுவும் மழை பெய்கின்றபோது சில கஷ்டங்கள் ஏற்படுகிறது என்ற ஒரு நிலை இருந்தது. அதனால் தான், அண்ணா மறைவிற்குப் பிறகு, ஆட்சிப் பொறுப்பேற்ற நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் 1970ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு அமைப்பை இந்தியாவிலேயே முதன் முதலில் ஏற்படுத்தியது தலைவர் கலைஞர் அவர்கள்தான். அன்றைக்கு ஒன்றிய அமைச்சராக இருந்த,

பெருந்தலைவர் பாபுஜி என்று அழைக்கப்படக்கூடிய பாபு ஜகஜீவன்ராம் அவர்களை வரவழைத்து அந்தக் கட்டடத்தை திறந்து வைத்தார். அதற்கு முன்னால்,  இந்த நாட்டிற்கு விடுதலையைத் தேடித் தந்திருக்கக்கூடிய ஒருவராக இருந்த ஜே.பி. என்று சொல்லக்கூடிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களையும் அழைத்து வந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார் என்பது வரலாறு. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற பேரறிஞர் அண்ணாவின் வழித்தோன்றலாக கலைஞர் அவர்கள் அந்தத் திட்டத்தை அன்றைக்கு செயல்படுத்திக் காட்டினார். இன்றைக்கு அதே திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்ற பெயரை தாங்கி,

இந்த கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை இன்றைக்கு நான் திறந்து வைத்திருக்கக்கூடிய நேரத்தில், உங்கள் முகங்களில் சிரிப்பை மட்டுமல்ல – ஒரு மலர்ச்சியை நான் பார்க்கிறேன், மகிழ்ச்சியை நான் பார்க்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்த காரணத்தால் நாங்கள் பயனடைகிறோம் என்று நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். உங்களை மகிழ்ச்சி அடைய வைக்க திராவிட முன்னேற்றக் கழக அரசு காரணமாக இருந்திருக்கிறது என்று எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, உங்களின் மகிழ்ச்சியைப் பார்க்கிறபோது! இன்றைய தினம் 840 குடும்பங்கள், அந்த குடும்பங்களின் வாழ்வில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.  ஒரு பழமொழி சொல்வார்கள் -கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் – என்று.

ஏனென்றால் அவ்வளவு சிரமம்.  இப்போது கல்யாணம் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நடந்துவிடுகிறது, அவரவர்களே முடிவு செய்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அது ஒன்றும் இப்போது அவ்வளவு கஷ்டம் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் அந்த பழமொழி- கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் – என்று சொல்வார்கள், அவ்வளவு கஷ்டம். ஆக, அத்தகைய சாதனைக்குரிய விஷயம்தான் வீடுகள் கட்டுவது என்பது! வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் கனவு! அந்தக் கனவை நிறைவேற்றுவதற்கு நாங்கள் காரணமாக இருந்திருக்கிறோம் என்பதுதான் எங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை! அதுவும், கொளத்தூர் தொகுதியில் மிக முக்கியமான பகுதி, இந்த கெளதமபுரம். இங்கு வரும்போதெல்லாம் இந்த கௌதமபுரம் பகுதியிலுள்ள மக்கள் எந்தளவுக்கு எனக்கு வரவேற்பு தந்திருக்கிறார்கள்,

தந்து கொண்டிருக்கிறார்கள், தந்து கொண்டே இருப்பார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அப்படிப்பட்ட நிலையிலேதான், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தபோது, இந்த அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி மிகப் பழுதடைந்து இருந்த அந்தக் கோலத்தை கடந்த 9.8.2015 அன்று இங்கு வந்து நான் பார்த்தேன். அதற்குப் பிறகு மீண்டும் 27.7.2016 அன்று நான் வந்து அதைப் பார்வையிட்டேன். பார்வையிட்டு, அந்தத் தகவல்களையெல்லாம் சேகரித்து இங்கு இருக்கக்கூடிய நம்முடைய மாவட்டச் செயலாளராக அன்றைக்கு இருந்த, இன்றைக்கு அமைச்சராக இருக்கக்கூடிய நம்முடைய திரு. சேகர்பாபு அவர்கள், அதேபோல இந்த வட்டாரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு. ரங்கநாதன் அவர்கள்,

நம்முடைய மாநிலங்களவை உறுப்பினர் திரு.கிரிராஜன் அவர்கள், நம்முடைய திரு.நாகராஜன் அவர்கள், முரளிதரன் அவர்கள், போன்றவர்கள் எல்லாம் இங்கிருக்கக்கூடிய வட்டக் கழகச் செயலாளர்கள் போன்றவர்களெல்லாம் என்னிடத்தில் தொடர்ந்து இதை வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.

அதற்குப் பிறகு அவர்கள் தந்த அந்தக் குறிப்புகளையெல்லாம் வைத்துக் கொண்டு, மறுபடியும் நான் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் என்ற அந்த வரிசையில் அமர்ந்து இருக்கின்றபோது, இந்தக் குடியிருப்பு பழுதடைந்து இருக்கிறது, இதை பழுது பார்க்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை நான் வலியுறுத்தி எடுத்துவைத்தேன். அதற்குப் பிறகு மீண்டும் 3.5.2017 அன்று மீண்டும் இங்கு வந்து நான் பார்வையிட்டேன்.

உடனடியாக பழுது பார்ப்பதற்கு என்னுடைய சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாயை முதற்கட்டமான நான் ஒதுக்கீடு செய்தேன். ஆக, தொடர்ந்து பல்வேறு பணிகளுக்கு நம்முடைய இங்கே வந்திருக்கக்கூடிய மூத்த வழக்கறிஞர் திரு.என்.ஆர்.இளங்கோ அவர்கள், அவருடைய நாடாளுமன்ற உறுப்பினருடைய மேம்பாட்டு நிதி, அதேபோல இங்கிருக்கக்கூடிய  நம்முடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடைய மேம்பாட்டு நிதி, அதற்குப் பிறகு பல்வேறு நிதிகளைப் பெற்று அந்தப் பணிகளெல்லாம் நடந்தது.

அதேபோல, அடுக்குமாடி குடியிருப்பில் பழுதடைந்த

• கழிவுநீர்க் குழாய்கள்

• கழிவுநீர்த் தொட்டி

• பழுதடைந்த பீங்கான் கோப்பைகள்

• பழுதடைந்த படிக்கட்டுகள்

• பால்கனி சீரமைப்பு

• பழுதடைந்த மேற்கூரையை பூசுதல்

• சுவர்ப் பூச்சு வேலை

• தரைத்தளம் - ஆகியவற்றைப் பழுது பார்க்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

400 வீடுகள் இருந்த கௌதமபுரத்தில், பழைய வீடுகளெல்லாம் அகற்றப்பட்டு, தற்போது 840 புதிய வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது.

உண்ண உணவு -

உடுக்க உடை -

இருக்க வீடு -

அனைவர்க்கும் கல்வி -

அனைவர்க்கும் வேலை -

வாழ்க்கைக்குத் தன்மானம் -

நாட்டுக்கு இனமானம்

ஆகியவற்றை ஊட்டுவதற்கான உருவாக்கியிருக்கக்கூடிய ஆட்சியாகத்தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள். குடிசை மாற்று வாரியம் என்பதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயரைச் சூட்டினோம். குடிசையை மாற்றிக் கட்டடம் கட்டுவது மட்டும் நோக்கம் அல்ல. இந்த நகர்ப்புற மக்களது வாழ்க்கையும் மேம்பட வேண்டும் - வாழ்விடமும் மேம்பட வேண்டும் - வாழ்க்கைத் தரமும் மேம்பட வேண்டும் என்று நினைக்கும் அரசுதான் நம்முடைய கழக அரசு. அதனால்தான், இதை திராவிட மாடல் அரசு என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்! சில மாநிலங்களில் ஏதாவது ஒரு பெரிய விழா நடந்தது என்றால்,

வெளிநாட்டிலிருந்து ஒரு தலைவரை அழைத்துக் கொண்டுவந்து, நம்முடைய இந்தியாவில் இருக்கக்கூடிய சில மாநிலங்களில் சுற்றிப் பார்க்கின்ற நேரத்தில், அந்த மாநிலத்தில் இருக்கக்கூடியவர்கள் சில வேலைகளை செய்திருக்கிறார்கள், என்ன வேலை என்றால், அந்த குடிசைப் பகுதி அவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக தார்ப்பாய்களைப் போட்டு மறைத்திருக்கிறார்கள். அதுவும் நடந்தது, நம்முடைய நாட்டில். ஆனால் நம்முடைய மாடல் என்பது, மறைக்கும் மாடல் அல்ல – திராவிட மாடல்! அதனுடைய அடையாளம்தான் இந்த கெளதமபுரத்தில் இருக்கக்கூடிய இந்தக் குடியிருப்பு! உண்மையான - நேர்மையான இந்தத் திட்டங்களின் மூலமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை இன்றைக்கு நாம் உயர்த்திக் கொண்டு வருகிறோம்.

இந்தத் துறையின் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய திரு.அன்பரசன் அவர்கள், இங்கே குறிப்பிட்டுச் சொன்னார், 219 இடங்களில் 10,295 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  94,557 அடுக்குமாடி குடியிருப்புகள் நம்முடைய ஆட்சிக்காலத்தில் இப்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதற்கான முயற்சிகள்! அண்ணா சொன்னது “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று. அதற்குப் பிறகு கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு, “ஏழையின் சிரிப்பில் அண்ணாவின் முகத்தைக் காண்போம்” என்று சொன்னார். இப்போது நான் சொல்கிறேன் “ஏழையின் சிரிப்பில் கலைஞரின் முகத்தைக் காண்போம்” என்பதுதான் என்னுடைய உணர்வு. ஏழைகளின் முகத்தில் மகிழ்ச்சியை - மலர்ச்சியை உருவாக்கும் திட்டங்களின் மூலமாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்கள் நல அரசு என்பதை தினந்தோறும் நாம் மெய்ப்பித்துக் கொண்டு இருக்கிறோம்.

புதிய வாழ்விடங்களைச் சிறப்பாக உருவாக்கித் தரக்கூடிய அந்தப் பணியை இந்தத் துறையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய அமைச்சர் திரு. அன்பரசன் அவர்கள் மிகச் சிறப்பாக அவர் தன்னுடைய பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு அவர் மட்டுமல்ல, என்னுடைய தலைமையில் அமைந்திருக்கக்கூடிய நம்முடைய அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக்கூடிய எந்த அமைச்சரை எடுத்துக் கொண்டாலும், அவரவர்கள் அவர்கள் துறையில் எந்தளவுக்கு பணியாற்றிக்  கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நம்முடைய அமைச்சர் சேகர்பாபு அவர்களைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் எப்போது தூங்குகிறார், எப்போது விழித்துக் கொண்டிருக்கிறார்,

எப்போது எங்கு இருக்கிறார் என்று சொல்ல முடியாது. நேற்றைக்கு பார்த்தால் நாகர்கோவிலில் இருக்கிறார், கன்னியாகுமரியில் இருக்கிறார், இன்றைக்கு இங்கே வந்திருக்கிறார். அதேபோல அன்பரசன் அவர்கள் பற்றியும் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரும் பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

நேரு அவர்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. ஏற்கனவே அமைச்சராக இருந்து அனுபவம்  பெற்றவர். இன்றைக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக பொறுப்பேற்று நம்முடைய தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஒவ்வொரு நகரப்பகுதிக்கும் சென்று, ஒவ்வொரு மாநகரப் பகுதிக்கும் சென்று சுற்றி சுழன்று வந்து கொண்டிருக்கிறார். ஆக, இவை எல்லாம் கலைஞர் அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கக்கூடிய பாடம்.

கலைஞர் அவர்கள் ஸ்டாலினைப் பற்றி ஏதாவது ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ஒரே வரியில் சொன்னார், உழைப்பு! உழைப்பு! உழைப்பு! என்று சொன்னார். அந்த உழைப்பு எனக்கு மட்டுமல்ல, என்னோடு  இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய  அமைச்சர்களாக இருந்தாலும் சரி, சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, மேயர்களாக இருந்தாலும் சரி, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, எந்தப் பொறுப்பில் அவர்கள் தங்களை ஒப்படைத்துக் கொண்டிருந்தாலும் அந்தப் பொறுப்பை உணர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுதான் திராவிட மாடல் அரசு. ஆக அப்படிப்பட்ட திராவிட மாடல் அரசு இன்றைக்கு கம்பீரமாக தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.  அதற்கு நீங்கள் என்றைக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும், இருக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு, இந்தச் சிறப்பான நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தையுன் தெரிவித்து கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

Related Stories: