வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது: சீரமைக்க கோரிக்கை

வேலூர்: வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் பக்கவாட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நாட்டில் உள்ள தரைக்கோட்டைகளில் இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கும் கோட்டையாக வேலூர் கோட்டை விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோட்டையில் பல்வேறு கலை சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹33 கோடி மதிப்பீட்டில் வேலூர் கோட்டையை அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோட்டை அகழியை நவீன மிதவை இயந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டது.  கோட்டையின் கம்பீரமான கட்டமைப்பை இரவு நேரத்திலும் பொதுமக்கள் ரசிக்கும் வகையில் அகழிக்கரையில் இருந்து கோட்டை கொத்தளம் வரை மின் விளக்குகள் ஒளிர ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கிடையில் தொல்லியல் துறை சார்பில் கோட்டை முழுவதும் சிதிலமடைந்த கற்கள், சுற்றுச்சுவர்களும் சீர்செய்யப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உணவகங்கள் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோட்டை கொத்தளம் கொடி கம்பம் அருகே அகழி சுற்றுப்பாதையில் உள்ள பக்கவாட்டு சுற்றுச்சுவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சரிந்து விழுந்துள்ளது. கற்களால் கட்டப்பட்டுள்ளதால் மண் அரிப்பு ஏற்பட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக சுற்றுச்சுவர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது: வேலூர் கோட்டை உள்பகுதியில் அகழியை ரசித்து பார்க்கும் சுற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளும், காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களும் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் கொடி கம்பம் அருகே பக்கவாட்டு சுற்றுச்சுவர்கற்கள் சரிந்து விழுந்துள்ளது. அதை இன்னும் சீர்செய்யவில்லை. வரும் நாட்களில் கனமழை பெய்தால் மேலும் அரிப்பு ஏற்பட்டு சுற்றுப்பாதையே பெரிய பள்ளமாக மாறிவிடும். எனவே உடனடியாக தொல்லியல் துறை அதிகாரிகள் அந்த பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: