×

கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்றை கடந்த போது சேற்றில் சிக்கிய அரசு பஸ்: 4 மணி நேரத்துக்கு பின் போராடி மீட்பு

சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்றை கடந்த போது 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சேற்றில் சிக்கிய அரசு பஸ் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் மாக்கம்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் மாக்கம்பாளையம், கோவிலூர், அரிகியம், கோம்பை தொட்டி, கோம்பையூர் கிராமங்களில் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. வன கிராமங்களை சேர்ந்த மக்கள் அடர்ந்த வனப்பகுதி வழியாக கரடுமுரடான மண் சாலையில் வனப்பகுதியில் ஓடும் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் ஆகிய இரண்டு காட்டாறுகளை கடந்து கடம்பூர் மற்றும் சத்தியமங்கலத்திற்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

கடந்த சில நாட்களாக, கடம்பூர் மலைப்பகுதியில் பகுதியில் பெய்த கனமழையால் இரண்டு காட்டாறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் வன கிராமத்திற்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பஸ், வனப்பகுதியில் உள்ள சர்க்கரை பள்ளம் காட்டாற்றை கடந்த போது, பஸ்சின் சக்கரம் ஆற்றில் புதைந்து நகர முடியாமல் நின்றது. இதையடுத்து, பஸ்சில் இருந்து பயணிகள் மற்றும் மலை கிராம மக்கள் போராடி அரசு பஸ்சை நகர்த்த முயன்றனர்.

நீண்ட நேரம் போராடியும் சேற்றில் சிக்கிய அரசு பஸ்சை மீட்க முடியாததால் கடம்பூரில் இருந்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அரசு பஸ் மீட்கப்பட்டது. அதன்பின், வன கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. அரசு பஸ் சேற்றில் சிக்கி மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மலை கிராம மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

Tags : Kadampur , Govt bus stuck in mud while crossing jungle in Kadampur hills: Rescued after 4 hours of struggle
× RELATED தண்ணீர் தேடி அலைந்தபோது குழியில்...