முறையாக சம்பளம் வழங்காததை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறி ஒப்பந்த நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திடீர் போராட்டம் நடத்தினர். விழுப்புரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கோரியும், ஒரு நாள் விடுப்பு எடுத்தால் மூன்று நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்வதை நிறுத்த கோரியும் பெருந்திட்ட வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை சார்பில் காலை 10 மணிக்கு போராட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில், திடீரென இன்று காலை 7.30 மணிக்கு ஒன்று கூடிய 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் திடீரென பெருந்திட்ட நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாமல் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்பு அங்கிருந்து கலைந்து, போலீசார் அனுமதித்த பகுதிக்கு சென்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: