இனி நான் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்வேன்; வீடு திரும்பிய சிறுமி டான்யா உற்சாகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி..!!

சென்னை: அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ள சிறுமி டான்யா, நான் இனிமேல் பள்ளிக்குச் செல்வேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  ஆவடி வீராபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீபன்ராஜ், சௌபாக்கியம் தம்பதியின் 9 வயது சிறுமி டான்யா, அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். தமக்கு உதவிக்கரம் நீட்டுமாறு அரசுக்கு அச்சிறுமி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சிறுமிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் சவிதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தானாக முன்வந்து இலவசமாக சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தது. இதனை தொடர்ந்து பல்வேறுகட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 23ம் தேதி சிறுமி டான்யாவுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு 8 மணி நேர தொடர் அளித்து சிறுமியின் முகத்தை சீரமைத்தது. நாட்டிலேயே முதல்முறையாக 9 வயது சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட முக சீரமைப்பு அறுவை சிகிச்சையாகவும் இது அமைந்தது.

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுமியிடம் நலம் விசாரித்ததுடன் நம்பிக்கை அளித்தார். சிறுமி டான்யா குணமடைந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிறுமி டான்யா, தனது கன்னம் சரியானது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தற்போது மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்ல இருப்பதாகவும் கூறினார். தனக்கு உதவி செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Related Stories: