புதுகை அருகே நல்லூரில் பாஸ்ட் டேக் பிரச்னை டோல்பிளாசாவில் தாமதமாக செல்லும் வாகனங்கள்-நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுக்கோட்டை : காரைக்குடி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் பகுதியில் அமைத்துள்ள டோல்பிளாசாவில் பாஸ்ட் டேக் சரியாக வேலை செய்யாததால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவிக்கின்றனர்.காரைக்குடி- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் பகுதியில் டோல்பிளாசா அமைக்கப்பட்டுள்ளது. டோல்பிளாசாவில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு செல்லும் திசையில் நான்கு கவுன்டர்களும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்லும்போது நான்கு கவுன்டர்கள் என மொத்தம் 8 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அனைத்து கவுன்டர்களிலும் பணியாளர்கள் அமர்ந்து கட்டணம் வசூல் செய்தனர்.

பின்னர் பாஸ்ட் டேக் அமைப்பு கொண்டு வரப்பட்டது. இதில் இரண்டு ஓரத்திலும் ஒரு கவுன்டர் பணம் செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. தற்போது பணம் இரட்டிப்பாக செலுத்த வேண்டும் என்பதால் அதிகமான பேர் பாஸ்ட்டேக் எடுத்துவிட்டனர்.தற்போது அவ்வப்போது பாஸ்ட்டேக் அமைப்பு செயல்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் ஸ்கேனிங் செய்வதில்லை. பின்னர் பணியாளர் கையில ஒரு ஸ்கேனரை கொண்டு வந்து ஸ்கேன் செய்கிறார். இதில் சில நேரம் தாமதம் ஆகிவிடுகிறது. இதனால் அந்த பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வாகன போக்குவரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அந்தநாட்களில் கூட சரி செய்விதில்லை. இதனால் அந்தநாட்களில் வழக்கத்தைவிட அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இவர்களின் நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்ல முடியாமல் உள்ளனர். குறிப்பாக டோல்பிளாசாவில் ஏற்படும் தாமதத்தால் தனியார் பேருந்துகளின் ஓட்டுனர்கள் அவர்கள் பணி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாததால் திட்டு வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எடுத்துகாட்டாக ஒரு தனியார் பேருந்து புதுக்கோட்டையில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு திருச்சியில் இரவு 9 மணிக்கு மீண்டும் புறப்பட வேண்டும் என்றால் இந்த இடைபட்ட நேரத்தில் திருச்சியை சென்றடைய வேண்டும். ஆனால் டோல்பிளாசாவில் ஏற்படும் தாமதத்தால் குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனால் அந்த பேருந்து புறப்பட வேண்டிய நேரத்தில் அப்போது தயாராக இருக்கும் வேறு பேருந்து புறப்பட்டு செல்கின்றது. இதனால் தனியார் பேருந்துகளின் ஒட்டுனர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும் புதுக்கோட்டையில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் திருச்சியில் இருந்துதான் வந்து செல்கின்றனர். இவர்கள் வரும் வாகனங்களும் டோல்பிளாசாவில் சிக்குவதால் அவர்ளும் தாமதமாக அலுவலத்திற்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி பல்வேறு தரப்பினரும் தாமதமாக செல்ல வேண்டிய நிலையை கட்டணம் வசூல் செய்யும் நிறுவனம் செயற்கையாக ஏற்படுத்தியுள்ளது. இதனை தவிர்க்க அனைத்து கவுன்டர்களிலும் ஸ்கேனிங் அமைப்பை சரி செய்ய வேண்டும்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: நல்லூர் டோல்பிளாசாவில் ஒரு சில கவுன்டர்களில் ஸ்கேனிங் சிஸ்டம் வேலை செய்வதில்லை. வாகனங்கள் காலதாமத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பணியாளர்கள் விடுமுறை என்றால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தினசரி சில கவுன்டர்களை கட்டணம் வசூல் செய்யும் நிறுவனம் பூட்டிவிடுகிறது. இதனால் நாங்கள் தான் அவஸ்தைப்படுகிறோம்.

டோல்பிளாசாவில் கட்டணம் தனியார் நிறுவனம் வசூல் செய்தால் அதனை கட்டுப்படுத்த கூடிய வகையில் நெடுஞ்சாலை துறை உள்ளது. ஆனால் நல்லூர் டோல்பிளாசாவில் நிலவும் இந்த பிரச்னை குறித்து நெடுஞ்சாலை துறை மற்றும் அதிகாரிகள் கண்டுகொண்டதாக தெரியவில்லை. நெடுஞ்சாலையில் வாகனங்கள் தாமதமின்றி செல்ல அனைத்து வசதிகளையும் கட்டணம் வசூல் செய்யும் நிறுவனம் ஏற்படுத்தி தரவேண்டும்.

ஆனால் நல்லூரில் கட்டணம் வசூல் செய்யும் நிறுனம் வாகன ஓட்டிகளுக்கு எந்தவித வசதியை ஏற்படுத்தி தரவில்லை. வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என்றாலும் பரவாயில்லை அனைத்து கவுன்டர்களிலும் ஸ்கேனிங் அமைப்பை புதிய தொழில்நுட்பத்துடன் அமைக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களின் கோரிக்கையை நிரைவேற்ற வேண்டும் என்றனர்.

Related Stories: