×

வெள்ளப்பெருக்கில் இதுவரை 10 பேர் பலி காவிரி படிகளில் பாதுகாப்பு அம்சம் எதுவும் இல்லை-சுற்றிலும் இரும்பு பைப் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் வெள்ளப்பெருக்கில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். காவிரி ஆற்றுப்படித்துறைகளில் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை சுற்றிலும் இருப்பு பைப் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அதுமுதல் கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

இதிலிருந்து கிளை ஆறுகள், ஏ பிரிவு வாய்க்கால்கள் என தண்ணீர் கடைமடை வரை பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதில் கல்லணை கால்வாய் நீர் தஞ்சையிலிருந்து ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வழியாக பேராவூரணி, சேதுபாவாசத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு சென்று அதன் மூலம் வயல்களுக்கு சாகுபடிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. சாகுபடி காலம் முடிந்த பிறகு அதாவது ஜனவரி 26ம் தேதி மேட்டூர் அணை மூடப்படும். இதன்பிறகு அடுத்த ஆண்டு இதேபோல் வழக்கமாக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.

ஜுன் முதல் ஜனவரி வரை 8 மாத காலங்களில் ஆறுகள், கிளை ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கல்லணை கால்வாயில் தரைத்தளம் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் சிமெண்ட் கான்கிரீட் கொண்டு கட்டப்பட்டு வருகிறது. அதிலும் கல்லணை கால்வாய் தஞ்சாவூர் மாநகரின் உள்ளே நுழைந்து செல்கிறது. இதில் மாநகரில் மட்டும் இந்த ஆறில் 10 இடங்களில் படித்துறைகள் உள்ளன. ஆனால் இதில் எந்த படித்துறையிலும் பாதுகாப்பு அம்சங்கள் அறவே இல்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த ஆண்டு கடந்த மே மாதம் தண்ணீர் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை தஞ்சாவூர் நகரில் மட்டும் கல்லணை கால்வாயில் தவறி விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ளது. சென்ற ஆண்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 28. இதற்கு முதல் காரணம் படித்துறைகளை சுற்றிலும் இரும்பு பைப் அமைக்கப்படாதது. குறிப்பாக தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே உள்ள படித்துறையில் ஏற்கனவே இருந்த இரும்பு பைப் துருப்பிடித்து வீணானது. மேலும் சமூக விரோதிகளால் சில பைப்புகள் களவாடப்பட்டும் விட்டது. ஆனால் இதன்பின்னர் இங்கு படிகளில் இரும்பு பைப்புகள் அமைக்கப்படவில்லை.

பெரியகோயிலுக்கு சுற்றுலா வருபவர்கள் அதிலும் காலை நேரத்தில் கல்லணை கால்வாயில் தண்ணீர் செல்வதை பார்த்ததும் ஆசையில் ஆற்றில் இறங்கி குளிக்க தொடங்கி விடுகின்றனர். ஆற்றின் ஆழம் தெரியாமல், பாதுகாப்பு எதுவும் இன்றி குளிப்பதாலும், படிக்கட்டுகளில் பாசி படிந்து கிடப்பதாலும் வழுக்கி விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்படுகின்றனர்.
இதை தடுக்க பொதுப்பணித்துறையும், மாநகராட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து மா.கம்யூ மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் கூறும்போது, கல்லணை கால்வாயில் தண்ணீர் செல்லும் காலங்களில் அதிகளவில் இறப்புகள் நிகழ்கிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பெரியகோயில் அருகே உள்ள படித்துறை மிகவும் அபாயகரமாக உள்ளது. பாலத்திலிருந்து நேரடியாக ஆற்றுக்கு செல்லும் வகையில் உள்ளது. மேலும் அங்கு படிகளில் இரும்பு பைப்புகள் அமைத்து பொதுமக்கள் பாதுகாப்புடன் குளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆற்றில் நீரின் இழுவை அதிகளவில் உள்ளதால் படித்துறைகளின் அருகில் எச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும். நகரில் உள்ள அனைத்து படித்துறைகளிலும் இரும்பு பைப்புகளை அமைத்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

முக்கியமாக கல்லணை கால்வாயில் தவறி விழுந்தால் இறப்பு நிச்சயம் என்ற நிலை உள்ளது. இதற்கு காரணம் ஆற்றின் பக்கவாட்டு கரைகள் அனைத்து சிமெண்ட், கான்கிரீட் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தவறி விழுவோர் பக்கவாட்டில் செடி, கொடிகளை பிடித்து தப்பிக்க வாய்ப்பே இல்லை. சமீபத்தில் சேலத்திலிருந்து வந்திருந்த மாணவர்கள் இங்கு குளித்தபோது தவறி விழுந்த மாணவரை காப்பாற்ற சென்ற இன்னொரு மாணவர் தப்பிக்கவே கடுமையாக போராடினார்.

ஏதோ ஒரு இடத்தில் இருந்த செடிகொடிகளை பிடித்து தப்பினார். மீட்புப் பணித்துறை வீரர்கள் கூட இறந்த போனவர்களின் உடல்களை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே பக்கவாட்டு சுவர்களிலும் ஆங்காங்கே இரும்பு பைப்புகளை அமைத்து தவறி விழுந்து ஒரே வேளை தப்பிக்க வாய்ப்பு இருந்தால் இந்த பைப் பிடிமானத்தை பிடித்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இதில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆற்றில் குளிப்போருக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

Tags : Kaviri , Thanjavur: Ten people have been killed in floods in Thanjavur. None of the safety features in the Cauvery River
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4ல்...