×

வேலூர் கோட்டை பூங்காவில் குவிந்த மக்கள்-அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்

வேலூர் : வேலூர் கோட்டை பூங்காவில் திடீரென குவிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் மக்களால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்தியாவில் இன்றளவும் மிகவும் வலுவுடன் உள்ள கோட்டையாகவும், தேசிய பாரம்பரிய சின்னமாகவும் உள்ள 15ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட வேலூர் கோட்டையும், அதற்குள் அமைந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலும் இந்தியர்களின் கட்டிடக்கலை திறமைக்கும், சிற்பக்கலைத்திறனுக்கும் சான்றாக விளங்குகிறது.

இக்கோட்டையை காண தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள மக்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
இதனால் வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டை வளாகம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. அதேபோல் இந்திய சுதந்திர தின 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கோட்டையை இரவிலும் கண்டுகளிக்கும் வகையில் அகழியை ஒட்டி கோட்டையின் மீது ஒளியை உமிழும் வகையில் சக்திவாய்ந்த மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் கோட்டைக்குள் உயரமான கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த  ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வேலூர் கோட்டை இரவிலும் பார்வையாளர்கள் கண்டுமகிழும் வண்ணம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் மாலை நேரங்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் குவிவதுடன் வேலூர் கோட்டையை காணவும், அதன் பின்னணியில் செல்பி எடுத்தும் செல்கின்றனர்.

இதுவே விடுமுறை தினங்களில் கோட்டை வளாகத்தின் உட்பகுதி மட்டுமின்றி, வெளிப்புறமும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதில் நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு மாலை 6 மணியளவில் வேலூர் கோட்டை வெளியில் இருபுறமும் உள்ள பூங்காக்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைமோதினர்.

இவர்கள் வந்த வாகனங்கள் அண்ணா சாலையில் கோட்டையை ஒட்டிய சாலையில் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோட்டை பூங்காக்களில் கூடிய மக்கள் கோட்டையின் இரவு நேர அழகை ரசித்ததுடன், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இவ்வாறு கோட்டை பூங்காவில் கூடிய மக்கள் நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் ஆசாமிகளும், திருட்டு ஆசாமிகளும், சமூக விரோதிகளும் அடாத செயல்களில் ஈடுபடாதவாறு சாதாரண உடையில் போலீசார் மக்களுடன் மக்களாக கலந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Vellore Fort Park- Anna Road , Vellore: Tourists and people at Vellore Fort Park
× RELATED மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும்...