போளூர் அடுத்த கீழ்பட்டு கிராமத்தில் சிதிலமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும்-புதிதாக கட்டுவதற்கு மக்கள் கோரிக்கை

போளூர் : போளூர் அடுத்த கீழ்பட்டு கிராமத்தில் சிதிலமடைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.போளூர் அருகே  கீழ்ப்பட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் நடுவில் கோயில் அருகிலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்திலும் 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட 45 ஆண்டுகள் பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்து வருகிறது.

இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியானது தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இருப்பினும், ஊராட்சி நிர்வாகம் இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பி வருகிறது. இதனால் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மேலிருந்து கான்கிரீட் சிமென்ட் பில்லர்களில் உள்ள இரும்பு கம்பிகள் பழுதடைந்து, முறிந்து விழுந்து வருகின்றன. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சிதிலமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் அதிக கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: