×

ஓணப்பண்டிகை விடுமுறை சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டியது கன்னியாகுமரி

கன்னியாகுமரி : சர்வதேச  சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு  மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஓணப்பண்டிகை  விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான  சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.ஞாயிற்றுக்கிழமையான நேற்றும்  திரிவேணி சங்கம கடற்கரையில் அதிகாலை சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா  பயணிகள் குவிந்தனர். சூரியன் உதயத்தை ரசித்த அவர்கள் கடலில் ஆனந்த  குளியலிட்டனர். ேமலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மற்றும் திருப்பதி  வெங்கடாஜலபதி கோயிலிலும் தரிசனம் செய்தனர்.

இதுபோல் கடலில் அமைந்துள்ள  விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகுத்துறையில் நீண்ட வரிசையில்  காத்திருந்தனர். ேமலும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகில்  ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு  திரும்பினர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நடந்து வருவதால்  அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை உள்ளது.

காந்தி நினைவு மண்டபம்,  காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, சன்செட் பாயின்ட், கடற்கரை  பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன்காட்சி சாலை, வட்டக்கோட்டை  பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும்  காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால்  முக்கிய சுற்றுலாத்தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு  குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.சுற்றுலா  பயணிகளின் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி  வழிகின்றன. வியாபாரமும் சூடுபிடித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

படகு சேவை பாதிப்பு

கன்னியாகுமரியில் நேற்று கடல் நீர்மட்டம் தாழ்வின் காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கவில்லை. காலை 10 மணியளவில் கடல் நீர்மட்டம் சீரானதும், படகு சேவை தொடங்கியது. இதன்காரணமாக முதலில் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் பின்னர் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Kanyakumari ,Onam , Kanyakumari : International tourist destination Kanyakumari attracts thousands of domestic and foreign tourists every day
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!