முன்னாள் ஒன்றிய அமைச்சர்-பிரபாஸ் உறவினர், நடிகர் கிருஷ்ணம் ராஜு மரணம்

ஐதராபாத்,: முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நடிகர் பிரபாஸ் உறவினரும், தெலுங்கு படவுலகின் சீனியர் நடிகரும், தயாரிப்பாளருமான உப்பலபதி கிருஷ்ணம் ராஜு (83), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1940 ஜனவரி 20ம் தேதி பிறந்த உப்பலபதி கிருஷ்ணம் ராஜு, 1966ல் ‘சிலக்கா கோரிங்கா’ படத்தில் அறிமுகமானார். ஆரம்பத்தில் பத்திரிகையாளராக இருந்தார். தெலுங்கு படவுலகின் ‘ரெபெல் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அறியப்பட்ட அவர், கடந்த 56 வருடங்களில் பல மொழிகளில் 180க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் போன்ற கேரக்டர்களில் நடித்துள்ளார்.

பலமுறை ஆந்திர அரசின் நந்தி விருதையும், பிலிம்பேரின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். இறுதியாக பிரபாஸ் நடித்திருந்த ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் அவர் நடித்ததார். திரைத்துறையில் நடிகராகவும், தயாரிப் பாளராகவும் வெற்றிகரமாகப் பயணித்து வந்த அவர், 1991ல் நரசாபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். 1999ல் லோக்சபா தேர்தலில் பாஜ வேட்பாளராக அதே தொகுதியில் வெற்றிபெற்று, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் ஒன்றிய இணை அமைச்சராகப் பணியாற்றினார்.

உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த உப்பலபதி கிருஷ்ணம் ராஜு, கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். பிரபாஸ் இவரது நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. உப்பலபதி கிருஷ்ணம் ராஜு மறைவுக்கு பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கு திரையுலகினர், முக்கிய அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: