×

சிறப்பு அந்தஸ்துக்கு வாய்ப்பே இல்லை: குலாம் நபி ஆசாத் பல்டி

பாரமுல்லா: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கடந்த மாதம் 26ம் தேதி கட்சியில் இருந்து விலகினார். ஜம்மு காஷ்மீரில் இவர் புதிய கட்சி தொடங்க உள்ளார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஆசாத் பேசியதாவது: இன்னும் 10 நாளில் புதிய கட்சி அறிவிப்பேன். என்னுடைய கட்சி நண்பர்கள்  புதிய கட்சிக்கு  ஆசாத் என பெயரிட வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு நான் மறுத்து விட்டேன். புதிய கட்சியின் கொள்கைகள் சுதந்திரமானதாக இருக்கும். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க செய்வதே கட்சியின் முக்கிய குறிக்கோள்.ஓட்டுக்காக  மக்களை தவறாக வழி நடத்துவதை நான் விரும்பவில்லை.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டு விட்டது. அதை மீண்டும் கொண்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை.  நானோ, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் அல்லது வேறு எந்த மாநில கட்சிகளாலும் இதை செய்ய முடியாது.  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சியால் மட்டுமே இதை செய்ய முடியும் இவ்வாறு அவர் பேசினார். புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை சமீபத்தில் ஆசாத் வெளியிட்ட போது, காஷ்மீருக்கு மீண்டும்சிறப்பு அந்தஸ்தை பெறுவதும் தனது கட்சியின் குறிக்கோள் என்று அறிவித்தார். இப்போது, அதில் இருந்து பின்வாங்கி உள்ளார்.


Tags : Ghulam Nabi Azad Baldi , No chance of special status: Ghulam Nabi Azad Baldi
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு!